Wednesday, 26 July 2017

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்
(12நவம்பர்1896-27ஜூலை1987 )



"மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்."
  -சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி நூலில்

தமது பெயரை சாலிம் அலி என அழைப்பதையே விரும்பினார்.ஆனால் பலர் இன்னும் சலீம் அலி என்றே சொல்லியும்,எழுதியும். வருகிறார்கள்.....

இந்தியாவின் பறவை மனிதர்.பறவைகளைப்பற்றிய அரிய பதிவுகளை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியவரும்,இன்றைய நமது சமகால பறவை ஆர்வலர்கள் பலரின் முதல் முன்னோடி என்பதையும் எத்தனைபேர் தெரிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை....

அவருடைய பறவைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தேடல்கள் மற்றும் ஆவணப் படுத்தும் காலகட்டம் என்பது மிக சிரமமான,சவாலானகாலம்.
காரணம் அன்றைய கால கட்டத்தில் பறவைகளை இனங்கண்டு ஆவணப்படுத்த இன்றைய காலம்போல் சிறப்பான எளிமையான கருவிகள்- குறிப்பாக புகைப்படக் கருவிகள்,தொலைநோக்கி கருவிகள் எளிதில் கிடைக்காத காலம் என்பதைவிட,இருந்தவற்றில்கூட இன்றைய எளிமையான நவீன மாற்றங்கள் அவற்றில் இல்லை....

ஆவணப்படுத்த எளிய இரண்டேவழிகள்தான் அப்போது உண்டு(!)...
ஒன்று ஆவணப்படுத்தவேண்டிய  பறவையை கொன்று பதப்படுத்துவது,பிரிதொன்று அந்தப் பறவைகளை படங்களாக வரைவது....

இன்றும் இப்படி சவாலான காலமாக இருந்தால் எத்தனை பறவை ஆர்வலர்கள் இன்றைக்கு நம்மிடையே உருவாகி இருப்பார்கள் என சற்று யோசிக்கவேண்டிய நிலைதான்.குறிப்பாக பறவைகளை படம்பிடிப்பவர்களை கண்டுபிடிக்கவே முடியாது....

அதுமட்டுமில்லாமல் அன்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான பாதைகளும் இல்லை,வாகனங்களும் இந்தளவு இல்லை,குறிப்பாக தொலை பேசிகளோ,மொபைல் போன்களோ இல்லை என்பது சவாலான காலம்தானே!....

1941ம் ஆண்டு Book of Indian Birds என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளுக்குமேல் கடந்துவிட்டது.
இந்த நூல் இந்தியாவில் எழுதப்பட்ட முதல் பறவைகள் வழிகாட்டிப் புத்தகமாகும். சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இன்றைக்கும் உலகம்முழுவதும் பிரபலமாக இருக்கும், இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார்...

தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவர் எழுதியுமிருக்கிறார்.கிட்டத்தட்ட சுமார் இருபதாண்டுகாலம் காட்டிற்குள் பறவை தேடுதலுக்காகவே நேரத்தை செலவிட்டிருக்கிறார்.இப்போதும்கூட பறவை ஆர்வலர்களை பயித்தியங்கள் போல பார்க்கும் மனநிலையில்தான் பலர் இருக்கும் நிலையில் அந்தக் காலகட்டத்தில் அவரை எப்படியெல்லாம் பார்த்து பேசியிருக்கும்!!!.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமது பத்தாவது வயதில் ஒரு பறவையை  வேட்டையாடி, அதன்பின் அதன்மீது ஆவலாகி,தேடுதலை துவங்கி பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் ஆரம்பித்து, பல வெளிநாடுகள்வரை சென்று தேடித்தேடி கற்ற சாலிம் அலி. பல பறவைகள்பற்றிய ஆராய்ச்சிக்கு பல பொக்கிசங்களை இந்த பூமிக்கு கொடுத்திருக்கிறார்....

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில்(BNHS)கற்க ஆரம்பித்த சாலிம் அலி பின்னர் அதன் தலைவராகவே ஆனவர்...

தீவிரமாக வேட்டையாடும் காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே,பல பறவைகள் மற்றும் உயிரியல் காப்பகங்கள், சரணாலயங்கள் உருவாக காரணமாக இருந்த இவரிற்கு,எண்ணற்ற விருதுகளும் கௌரவங்களும் வந்து சேர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை.அதிலும் குறிப்பாக,இந்திய அரசின் பத்மபூஷன் விருதும் 1958, பத்ம விபூஷன் விருதும் 1976 இவரது பறவையியல் சேவைக்காக தேடிவந்தது.
நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். மேலும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது...



தமது வாழ்வில் சுமார் அறுபத்தியைந்து ஆண்டுகாலம் பறவைகளையும்,உயிரினங்களையும் ஆராய்ந்த, அந்த மகத்தான பறவைமனிதரான சாலிம் அலியின் நினைவுநாள்தான் இன்று.நன்றியுடன் நினைவுகூறுவோம்....

நன்றியுடன்,
Ramamurthi Ram

Saturday, 8 July 2017

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்.



நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பவானிசாகர் அணைக்கட்டில் இருபதடி உயரத்திற்கு சேரும் சகதியும் நிரம்பியிருக்கிறது. மிக அதிகமாக நீர்வரத்து இருக்கும் போது அந்த இருபதடி நீரை தேக்கிவைக் முடிவதில்லை,ஆனால் இன்றைக்கு சுமாராக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர்,இப்போது இருப்பதைப்போல் எந்தவிதமான நவீன சக்திவாய்ந்த எந்திரங்களும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில்,அணை தன்னைத்தானே தூர்வாரும் நுட்பத்தை நமது முன்னோர்கள் கொடிவேரி அணைக்கடில் செய்திருக்கிறார்கள்.என்பது மிக வியப்பான ஒன்று அந்த அறிவும் தொழில்நுட்பமும் வளராமல் இன்றைக்கு ஏன் தேய்ந்தது என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்!!!...



நீர் மேலாண்மையில் நம்ம ஆட்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை எனச் சொல்லலாம். மனித ஆற்றலைக்கொண்டே,மணல்போக்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீர் குவிகின்ற மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் இருபதடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்திற்குள் கற்களால் ஆன நுட்பமான சல்லடை போன்ற அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு, மணலும்,சகதியும் அணையினுள் தேங்கி விடாதவாறு உருவாக்கி,இந்த மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது...
இந்த மணல்போக்கிகளின் வேலை என்னவென்றால் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து அணைக்கு வெளிப்பக்கமாக சுரங்கத்தின் துவாரம் வழியாக வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனிச்சிறப்பான தொழில்நுட்பம். இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்திருக்கிறது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் சிறப்பான நுட்பம் மிகுந்த கட்டுமான அமைப்பு இது....
சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், முழுக்க முழுக்க மனித ஆற்றலைக்கொண்டே,சற்று தொலைவிலுள்ள கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து கற்களைக்கொண்டுவந்து  மிகத்தெளிவாக உறுதியாக கட்டி முடித்திருக்கும் திறமையை எப்படித்தான் வியப்பது !!!...



நேர்த்தியான நீர்மேலாண்மையை கையாண்டு ஆற்றின் போக்கிலேயே அணக்கு வடக்குப்பக்கம் அரக்கன்கோட்டை கால்வாயும்,தென்புறம் தடப்பள்ளி கால்வயையும் அமைத்து பாசனத்தில் எஞ்சிய கழிவுநீர் மீண்டும் வடிந்து ஆற்றிற்கே வருகின்ற வகையில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்...
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிப்போர்களின் சொர்க்க பூமியாக மாறியிருக்கிறது.கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்தியிருகிறார்கள். காலி பாட்டில்களை அணைக்குள் எறிந்திருக்கிறார்கள்.கொஞ்சநாட்களுக்கு முன்பெல்லாம் தீவிரமாக நடந்தது இதுவெல்லாம்.இப்போதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.அப்போது குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு மூடியே விட்டார்கள்...
அருமையான தொழில்நுட்பத்தை மண்ணைப்போட்டு மூடி இன்றைக்கு மணலும் சகதியும் சேர்ந்து மேடாகி அணைக்குள் பெரும்பாலான இடத்தை செடிகள் ஆக்கிரமித்திருக்கிறது.குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத்திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்!
இது எங்கே இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு,பல சினிமாப் படங்களில் பார்த்திருக்கலாம்.ஈரோடு-கோபிச்செட்டிபாளையத்திலிருத்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் இந்தக் கொடிவேரி அணை அமைந்திருக்கிறது. திருப்பூரிலிருத்து வருபவர்கள் பெருமாநல்லூர்,நம்பியூர்,குருமந்தூர் வழியாக கொடிவேரியை அடையலாம்...



விடுமுறை நாட்களில் ஒருநாளை இங்கு சுகமான குளியலுடன் கழிக்கலாம்.இந்தமாதிரி சுற்றுலா இடங்களுக்கேயுண்டான ஆயில் மசாஜ் மற்றும் அங்குள்ள மக்களால் ஆற்றின் ஓரமாக நடத்தப்படும் தற்காலிக மீன்வறுவல், சாப்பாட்டுக்கடைகள் போன்றவையும் உண்டு.ஆசைதீரக்குளித்துவிட்டு பூங்காவில் குழந்தைகளுடன் நாளைக்கழித்துவிட்டு வரலாம்.தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை,கவர்களை எடுத்துச்செல்ல வேண்டாம்....

சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram

இன்னும் இதுபற்றிய அதிக தகவல்கள் மற்றும் கருத்துக்களை காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 4 July 2017

விலங்குகளுக்கு அபாயம்

"விலங்குகளுக்கு அபாயம்"



மின்கம்பங்களில்
DANGER
அபாயம்
ప్రమాదం
खतरा
അപായം
ભય
ಅಪಾಯ....
இப்படி சிவப்பு எச்சரிக்கை பலகைகளை பார்த்திருப்போம்.

இங்குள்ள மனிதர்களில் பாதிப்பேரிற்குக் கூட இதைப் படித்து புரிந்து கொள்ள முடியாது.....

இதில் விலங்குகளின் நிலைதான் ஆகக் கொடுமை. அதற்கு எந்த எல்லையுமே இல்லாததால்,
அதற்கு ரோடு எது..,
விவசாயக் காடு எது..,
மின்கம்பம் எது..,
வேகமாக போகும் ரயிலோ..,
வாகனங்களையோ....
பிரித்து அறிகின்ற அறிவா இருக்கும்!...

மனிதர்களின் அபாய அறிவிப்புகளை அறிந்துகொள்ளுமளவு புத்திசாலியானவையா விலங்குகள்?...
அவைதான் நம்மைப்போல் படிக்கவில்லையே?!...

அவைகளை காக்கவேண்டுமென வாய்கிழிய கத்தும் அரசுகளின் திட்டம் ஆனால் அதை செயல்படுத்தும் அரசு இயந்திரங்களை இயக்கும் மனிதர்கள் அந்த அளவிற்கு சிந்திப்பதில்லை சிந்திக்குமளவிற்கு அவர்களும் இல்லை.அவர்களோ
அத்தியை வெட்டு..,
ஆளைவெட்டு...
என அறிவோடு பேசுகிறார்கள்...



இப்படியிருக்க நேற்று உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி உயிரை விட்டிருக்கிறது ஒரு சிறுத்தை.🐆🐆🐆 இந்தக்கொடுமை தெலுங்கானா வின் ஹைதராபாத்-நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாரம் வனப்பகுதிக்கு அருகில் நடந்திருக்கிறது...

இவ்வளவு பெரிய சிறுத்தை எப்படி இந்த மின்கம்பத்தில் ஏறும் என கிராம மக்கள் கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை அடித்த இரையை தூக்கிக்கொண்டு நன்றாக மரங்களில் ஏறும் சிறுத்தையால்.எதுவுமில்லாமல் மின்கம்பத்தின் மேலே ஏறுவது பெரிய விசயமில்லை.ஏற்கனவே கடந்த ஆண்டு குஜராத்தில் மயிலைத் துரத்திச்சென்ற சிறுத்தை மின்சார டிரானஸ்பார்மரில் ஏறி, எரிந்து உயிரை விட்டது உலகிற்கே தெரியும்.நமது பதிவிலும் இருக்கிறது...



இது போன்ற பல இடங்களில் பலமுறை பறவைகள்,கரடிகள்🐨🐒🐘🦍🦉🦅 உட்பட பல விலங்குகள் இறந்திருக்கின்றன.கடந்தவாரத்தில் மிகத்துயமான வகையில் கர்நாடக குடகு பகுதியில் வனத்தையொட்டிய காபித் தோட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஆறு யானைகளைப் பலி கொடுத்தோம்....



இப்படி எஞ்சியிருக்கிற குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்குகளை காப்பதற்காவது ,குறைந்தபட்ச திட்டமாக, விலங்குகள் நடமாடும் பகுதிகளிலாவது பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.விலங்குகளை பாதுகாக்க ஒதுக்கப்படும் பலகோடி ரூபாய்கள் என்னவாகின்றனவோ?!...

கேட்டால் ஆளாளாலிற்கு வேறுவேறு துறைகளை மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.நடக்கிற துயர சம்பவத்திற்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்கிற நிலையிலேயே விலகி நின்றுவிடுகிறார்கள்.இவர்கள் இப்படியிருக்க ஒன்இந்தியா வீடியோவைப் பாருங்கள் சிறுத்தைக்குப்(Leopard) பதிலாக இந்தியாவிலேயே இல்லாத சிவிங்கிப்புலியின்(cheetah)படத்தைப் போட்டு காமெடி பன்னுகிறான்.இதுபோன்ற ஊடகங்களுக்கு எப்போதுதான் பொறுப்பு வருமோ.இது எல்லாமே அறிவுப் பஞ்சத்தின் விளைவு...

ஒரு முடிவெடுத்து மனிதக்கவனக் குறைவால் நடக்கும் இதுபோன்ற இழப்புகளையாவது தவிர்க்கலாம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

மேலும் அதிக விபரங்கள் மற்றும் கருத்துகளுக்கு எமது முகநூல்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Monday, 3 July 2017

கும்பகோணம்

"கும்பகோணம்"

எமது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சம்பவங்களை துவக்கிவைத்த ஊர்.எனது ஊர் கோவைப்பகுதியாக இருந்தாலும் கும்பகோணத்திற்கும் எமக்கும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது எமது நண்பன் "காட்டூர் ராஜா" வினுடனான,இருபத்தியெட்டு ஆண்டுகால நெருங்கிய நட்புதான்



இது சாதாரண உறவல்ல, இருவர்குடும்பத்திற்குமான நெருங்கிய உறவு அது, என்பதில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமையும். சுகதுக்கங்கள் அனைத்திலும் இரு குடும்பமுமே பங்கெடுத்துக் கொள்வோம்.அப்படி ஒரு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டு,உடனடியாக ஊர்திரும்பலாம் என்று இருக்கும்போது,இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம் அப்படியே பிச்சாவரம் அலையாத்திக் காடுகளை பார்க்கலாம் என திடீர் முடிவுசெய்து குடந்தையிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்துவிட்டு, இரவு தங்கலுக்கு சிதம்பரம் சென்றுவிட்டோம்.நான் சிதம்பரம் சென்றதை பலரிற்கு முகநூல்வழியாக மார்க் காட்டிக்கொடுத்துவிட்டார்.உடனடியாக பசுமை ஹாஜியிடமிருந்து மெசேஞ்சரில் தகவல் அது அப்படியே உங்களுக்கு...



"சார் சிதம்பரம் அருகே சற்று முன் வந்து சென்றீர்களா  ?"

கொஞ்சம் தாமதமாக எமதுபதில்...
"வணக்கம் அய்யா நான் தற்போது சிதம்பரத்தில்தான் இருக்கிறேன்...  :) "

"சிதம்பரத்திலிருந்து 17 Km. தான் எனது ஊர்.
போன் காண்பித்தது நீங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக!
சிதம்பரத்தில் எங்கு தங்கியுள்ளீர்கள்  ,?
உங்களின் மொபைல் நம்பர் Pls...
....நான் சிதம்பரத்தில் இருந்து இப்பொழுதுதான் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊர் வந்தேன்"...
-இது பசுமை ஹாஜி.

இதற்குப்பிறகு எங்கள் உரையாடல் போன்மூலம் தொடர்ந்து அவருடைய அன்பையும் அழைப்பையும் தவிர்க்கவே முடியாமல்,அடுத்தநாள் மதியம் பிச்சாவரத்திலிருந்து பரங்கிப்பேட்டை சென்று....







எமது வாழ்வில் மறக்கமுடியாத நாளாக ஆக்கிவிட்டார். அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எவ்வளவு அன்பான அக்கறையான குடும்பம் என சிறிது நேரத்தில் உணர்த்திவிட்டார்கள்.நேரில் அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கா? அதுவும் மதிய உணவிற்கா ?.... வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து,
முடிந்தவரை அவர்வீட்டிற்குச் செல்வதை தவிர்த்துவிட்டு அவரைமட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்றிருந்த எம்மையும் குறிப்பாக எமது மனைவி மகளையும் வழுக்கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்...

போகாதிருந்திருந்தால் வாழ்வில் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்த வாய்ப்பை இழந்திருப்போம்....
சரி போகிறோம் உடனடியாக கிளம்புகிறோம் என்றிருந்த எங்களது முடிவை அவர்களது அருமையான விருந்தும் பேச்சும் மாலைவரை அங்கேயே இருக்கச்செய்துவிட்டது.....

ஊரெங்கும் மரங்கள் குறிப்பாக பாதியளவு புங்கன் மரங்கள் மீதியுள்ளவை மற்ற நாட்டுமரங்களை காண முடிந்தது.வெறும் பேச்சு வெட்டிவேலை என உணர்ந்த ஹாஜி மாற்றம் தன்னிடமிருந்தே துவங்கவேண்டும் என முதலில் தமது வீட்டிற்கு அருகே மரங்களை நட ஆரம்பித்து,வீதியெங்கும் அந்த நற்காரியம் தொடர்ந்து பிறகு பக்கத்து தெருக்கள் என ஊரே இயங்கி இப்போது முழுவதுமாக மரங்கள்....
மரங்கள்...

வீடெங்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கான இரும்பு கூண்டுகளும்,கம்பிவலைகளும் இருப்பதைக் காண முடிந்தது.குடும்பத்தையும் குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தைகளையும் மரங்களின் காதலர்களாக,காவலர்களாக மாற்றி வைத்திருக்கிறார்...

இப்போது பக்கத்து ஊர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு சற்று தொலைவிலுள்ள ஊர்களிலும் இளைஞர்களை திரட்டி அங்கும் மரங்களின் அவசியம்பற்றி எடுத்துரைத்து மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல் அதை பராமரிப்பதையும் வலியுறுத்தி கற்றுத்தருகிறது இவர்கள் குழு.இந்த நற்செயல்களுக்கு காரணமாக இருந்த முன்னோடிகளையும் இப்போது களத்தில் உதவிவருபவர்களையும் மறக்காமல் குறிப்பிட்ட ஹாஜி தன்னால் மட்டும் அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது, எமக்கு மிக மிக தன்னடக்கமாகவே பட்டது.....

பிறகு பேச்சு காடுகள்,விலங்குகள்,பறவைகள் அவற்றால் காடுவளர்ப்பு- பெருக்கம் என எங்கள் அனுபவங்களையும் மாறி மாறி பகிர்ந்துகொண்டு,புறப்பட மனமில்லாமலே புறப்பட்டோம் காரணம்,எங்களுக்குள் பேச இன்னும் நிறைய விசயங்கள் இருப்பதாகவே பட்டது.பேச்சு முற்றுப்பெறாமலேயே பரங்கிப்பேட்டையிலிருந்து எங்கள் பயணம் கோவையை நோக்கி பறப்படத் தயாரானது....

அவர் கொடுத்த பரங்கிப்பேட்டை ஹல்வா சுவை இன்றும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.அதன் பெருமைகளையும் அவர் சொல்லத் தவறவில்லை...

இங்கும் #தாளிப்பனை:



சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

இந்தப் பயணத்தை நல்ல அனுபவமாக்கிய சகோதரர்  பசுமை ஹாஜி அவர்களுக்கும்,முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அன்பை வருத்தமாக வெளிப்படுத்திய தம்பி Stepan Edbark க்கும்.விழுப்பரம் அங்கிருந்து பக்கம் தான் வந்துவிட்டுச் செல்லுங்கள்.என அன்புக் கட்டளையிட்ட சகோதரர் Swaminathan Sellasundaram க்கும், நன்றிகளையும் அன்பையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்...

என்றும் சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
மேலும் இதுபற்றிய தகவல்கள்,கருத்துகளைக் காண,
https://m.facebook.com/story.php?story_fbid=1332210333561665&id=100003181323647

Sunday, 25 June 2017

கானக மைனா

கானக மைனா...



இந்தப்படத்தை வைத்து மானைப்பற்றி எழுதுவதா ?..
இல்லை மைனாவைப் பற்றி எழுதுவதா ?....
மானை அதுவும் இந்த மிளா என்கிற கடமான்கள் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது,
( https://m.facebook.com/story.php?story_fbid=1223120461137320&id=100003181323647 )....

இப்ப இந்த மைனாவைப் பற்றி பார்ப்போம்.,
சரி மைனாக்கள் என்றாலே எங்கும் நிறைந்திருக்கின்ற,இப்போது கிட்டத்தட்ட காக்கைகளுக்கு சமமாய் எண்ணிக்கையிலும்,செயலிலும் இருக்கும், நாகணவாய்ப்புள் என்கிற சாதாரண மைனாதான் நினைவுக்கு வரும். அதற்கு எங்கள் பகுதியியில் என்ன பெயர் தெரியுமா ?....
அழுகவண்ணான் குருவி(அளுகனாங்குருவி)....
ஏன் இதற்கு இந்தப் பெயர் என இதுவரை தெரியவில்லை.வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கு இவை ஆஸ்த்திரேலியா கொண்டு செல்லப்பட்டு,ஒரு வழியாய் வெட்டுக்கிளிகள் அங்கே  ஒழிந்தது.ஆனால் இவற்றை கட்டுப்படுத்தவே முடியாமல் அரசாங்கமே திணறியதெல்லாம் ஊரறிந்த கதை...



மைனாக்களில்(starling) பல வகைகள் இருந்தாலும் நான் பார்த்தவை கிட்டத்தட்ட ஆறு வகைகள்...
அதில்,
மைனா(common mynah).,
கருந்தலை மைனா(Brahmini starling).,
காட்டு மைனா( jungle myna).,
மலை மைனா(hill mynah),
ரோசாமைனா-சூறைக்குருவி (Rosy starling).,
சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)...

இந்தப் படத்திலுள்ளது காட்டு மைனா.மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு.அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.இதன் அடர்ந்த நிறமும் அலகும்,அலகிற்கு மேலுள்ள மீசையும்  இன்னும் கூடுதல் அழகுதான்...

ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்தே வாழும் என்பதற்கு இந்தப் படத்திலுள்ள மைனா நல்ல உதாரணம்.நாங்கள் பார்க்கும்போது அந்த பெண்கடமானின் கண்களிலும் மூக்கிலும் உள்ள கழிவுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தது.அதற்கு வாகாக அந்த மானும் தலையை அசைக்காமல் லயித்து நின்று கொண்டிருந்தது. நாமக்கு காது குடைவதுபோல் அதற்கும் சுகமாகக்கூட இருந்திருக்கலாம்.அது அசையாமல் அனுபவித்ததை அப்படித்தான் பார்க்க முடிந்தது.ஒரு உயிரினத்திற்கு அந்தக் கழிவுகூட உணவாகவும்,இன்னொன்றிற்கு சுகமும் சத்தமும் நடந்துகொண்டிருப்பதுதான் இயற்கையின் சிறப்பு...

மானின் மீது சவாரி செய்து கொண்டே பறக்கும் பூச்சிகளை பிடித்துண்ணுவது,மைனாவிற்கு கூடுதல் பயன்.காட்டுமாடுகள் மீதும் இப்படித்தான் சவாரி செய்யும்.புழு பூச்சிகள் மட்டுமல்ல பழங்களையும்,பூக்களில் உள்ள மதுரத்தையும் மிக விருப்பமாக உண்ணும்....

வனக்காடுகளில் மட்டுமே இதைப் பார்த்திருக்கிறேன்.நீலகிரி மலையிலுள்ள கிராமங்களில் எல்லாமே இங்குள்ள சாதாரண மைனாக்களைப்போல்,வீடுகளுக்கு முன்புள்ள கழிவுகளில் உணவைத் தேடுவதையும்,சோற்றுப் பருக்கைகளை தின்பதையும் பார்த்திருக்கிறேன்.ஆனால் வனச்சூழலில்,அழகாக பல குரல்களில் கூட்டமாக பழமரங்களில் கூச்சலிடுவதை மிக மிக இரசித்து அனுபவிக்கலாம்.ஒவ்வொரு வகை மைனாவிற்கும் ஒவ்வொரு விதமான குரல்கள்.அனைத்தும் இனிமைதான்.அதில் இது தனி ரகம்.வனவிலங்கு சட்டம் கடுமையாவதற்கு முன்பெல்லாம் மனிதர்கள் இதைப்படுத்திய பாடு இருக்கிறதே!...
குஞ்சுகளாய் இருக்கும்போது கூண்டில் அடைத்து கிளிகளைப்போல் பேசக்கற்றுக் கொடுத்தால்,இது அசத்தும்.நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் உள்ள மைனா அங்கு வருபவர்களைஎல்லாம், வாங்க...
வாங்க...
உட்காருங்க என்று சொல்லுமாம்!(கத்துமாம்).இதை எனது நண்பன் பாபு சொல்லும்போது மிக ஆச்சரியப்பட்டேன்.ஒரு குஞ்சு அங்கே ஐநூறு ரூபாய்களுக்கு அப்போது விற்றதெல்லாம் தனிக்கதை...

உங்களுக்கும் இந்த மைனாக்களுடன் பேசிய அனுபவமிருந்தால் பகிருங்கள்.

என்றும் சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52

Wednesday, 21 June 2017

தாளிப்பனை

தாளிப்பனை
(talipot palm-Corypha umbraculifera)



அதிசயம்....
ஆகா என்னவொரு அதிசயம்...
எது அதிசயம் ?...
என்கிற கேள்வியைப்போட்டேன் அங்கு கூவிய சிலரிடம்....
நூற்றியிருபது வருசம் கழித்து பூத்திருக்கும் இந்தப்பனம்பூ அதிசயம்தானே....
மிக தெய்வாம்சம் பொருந்தியது இந்தப் பனை மரம்....
அதோடு அங்கே சூடம் கொழுத்தி,
அகல்விளக்கு ஏற்றி,
ஊதுபத்தி காட்டி,
ஹோமகுண்டமே உருவாக்கி,
அந்த அடிப்பனைமரத்தையே கொழுத்தி,கருக்கிவிட்டார்கள்...
பரிதாபம்,அத்தப் பனையின் இறுதிக்காலத்தில் இப்படியொரு அவலநிலை....
இதைப்பார்த்த எமக்கோ.,
கால்கள் கருக்கிய "கரிகாலன்" போல தோன்றியது
நூற்றியிறுபது வருடமான அந்த மூதாய் மரத்தின் நிலையைப் பார்த்து....




எல்லாப் பனைமரமும் பூக்காது இப்படி தெய்வசக்தி மிகுந்த பனைமரம் மட்டுமே பூக்கும்.அதை வணங்கினால் மனிதர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும்,என கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாய் பனைமர பக்தர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு.
நாங்கள் அங்கிருந்தது சிறிது நேரம் மட்டுமே அந்த நேரத்தில் கோவையிலிருந்து ஒரு குடும்பமும்,கோபியிலிருந்து இருவரும் சுற்றிச்சுற்றி வந்து வணங்கிவிட்டு சிறிது கருகிய திலையிலிருந்த பனையின் சாம்பலை நெற்றியில் பக்தியுடன் வைத்துக்கொண்டிருந்தார்கள்...
இவற்றைப் பார்த்தபோது,இவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பதா ?
இல்லை அழுவதா ?
இவர்களோடு வாழ்வற்காக அவமானத்தில் கூனிக்குறுகுவதா,என எமக்குத்தெரியவில்லை,அந்தப் பகுதி நீண்ட நாட்களாக திடீர் சாமிகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம்தான்....
ஆமாம் என்ன அதிசயம் ?
அவர்களிடமே கேட்டேன்,
பதிலில்லை...
முந்தைய காலத்தில்,எங்கும் நிறைந்திருந்தவற்றை முற்றிலும் மனிதர்களால் அழித்தொழித்தபின் எஞ்சியவை எங்காவதொன்று தென்பட்டால் அதுதானே அதிசயம்- இது நான்... 



அவர்களைப் பொறுத்தவரை இங்கு, எங்கும் காணப்படும் பனைகளிலேயே (Borassus-Palmyra palm) இந்தச் சிறப்புமிகுந்த தெய்வீகசக்தி கொண்டவை மட்டுமே பூக்கும்.,
மற்றவையெல்லாம் பூக்காது.
அய்யோ... :(
இருபத்தியொறு வகைகளுக்கு மேற்பட்ட பனைவகைகளில் இந்தவகை வாழ்வில் ஒருமுறைமட்டுமே பூக்கும்.அதோடு அது சிறிது காலத்தில் இறந்துவிடும்.நாம் காணும் சாதாரனபனை (Borassus-Palmyra palm) ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் அதன் பெண்மரத்திலிருந்துதான் நமக்கு சுவையான நுங்கு கிடைக்கிறது...
ஆனால் இந்த தாளிப்பனை அதன் வாழ்வில் ஒரே முறைமட்டுமே மிகப்பெரிய பூங்கொத்தை பூக்கிறது.அதில் லட்சக்கணக்கான மலர்களுண்டு.ஒரே மரத்திலேயே ஆண்,மற்றும் பெண் தன்மைகளைக் கொண்டிருக்கும்.காய்கள் காய்த்தபின் பனை வறண்டுவிடுகிறது.சுமாராக என்பதடிக்கு மேலான உயரமும்,நல்ல பருமனும்,பதினாறடி விட்ட அளவுள்ள ஒலைகளையும் கொண்டிருக்கிறது.மற்ற பனைக்கும் இதற்குமுள்ள அளவு வேறுபாடுகளைக்காண வீடியோ இணைத்திருக்கிறேன்....
"தாளிப்பனை"
-இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை,
தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள்."தாளிப்பனை" என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது.,
“வேர்! வேர்! என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
தேன் மணம்
என்ன தேன்?
பூந்தேன்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
சும்மா”... இப்படிப்போகிறது.
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே”
 - (திவாகர நிகண்டு: 700)
"தாலிப்பனை"
-முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள்.பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது.அதனாலேயே இது தாலிப்பனை...

(ஈரோடு-கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் ரோட்டில் குருமந்தூரை அடுத்த,கீழ்பவானி பாசனக்கால்வாய்க்கு முன்பாக இந்த இளம் தாளிப்பனை உள்ளது.இது சிறியதாக இருக்கும்போதிருந்து பார்த்து வருகிறேன்)

"விசிறிப்பனை"
-மன்னர்கள் காலத்தில் இப்போதைய மின்விசிறிகள் இல்லையே! அப்போது இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு "பங்கா" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு....
"குடைப்பனை"
-கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது  பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு...
"கூந்தப்பனை"
- அங்குள்ள ஒரு பெரியவரிடம் கேட்டேன் இதைக் கூந்தப்பனை என்கிறார்.பல பதிவுபளிலும் இந்தப் பெயரை(கூந்தல்பனை-கூந்தப்பனை)என்பதனையே தாலிப்பனையை குறிப்பிட்டிருப்பதை காணலாம்...
ஆனால்,கூந்தல்பனை(Caryota urens)பற்றி நான் பார்த்ததும் கேள்விப்பட்டதும்.குமரிப் பகுதியில் உலத்திமரம் என்றும் இலங்கயில் கித்தூள் எனப்படுவதுமான,திருமணம் போன்ற விழாக்களில் வாழையோடு கட்டப்பட்டிருக்கும் நீண்ட சௌரிபோன்ற  குழைகளைப் பார்த்திருக்கிறேன்.அதன் மயிர்பகுதிகளில் பட்டாணி போன்ற காய்களைக் காணலாம்.அதை சௌரிப்பனை என்றும் சொல்கிறார்கள்.ஆனால் தாலிப்பனைக்கு கூந்தப்பனை என்கிற பெயர்க்காரணத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.பூக்கும் காலத்தில் வெண்கூந்தல்போல் காணப்படுவதால்கூட இப்பெயர் இருக்குமோ!..
"காலிப்பனை"
-இதற்கு காலிப்பனை என்கிற பெரும் உள்ளது.இதற்கும் பெயர்க்காரணம் தெரியவில்லை.பூத்தவுடன் காலியாகிவிடுவதாலா!... :D
இதுமட்டுமில்லை,
தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.
சங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்... :)
இங்கு விழுந்து,விழுந்து வணங்கிக்கொண்டிருக்க,இலங்கயில் இது பூக்கும் பகுதிக்கு கேடு என்கிற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. ஆக இரண்டு நம்பிக்கையும் களையப்படவேண்டியவையே...
தாலிப்பனையின் நீண்ட மெல்லிய வலுவான நான்கடி நீளமுள்ள ஓலைகளை பக்குவப்படுத்தியே பெரியபெரிய ஓலைச்சுவடிகளில் பெரும் காப்பியங்களையும்,காவியங்களையும் எழுதி வந்திருக்கிறார்கள். நன்கு பராமரித்தால் முன்னூறு நானூறு ஆண்டுகள் கூட பழுதில்லாமல் இந்தச் சுவடிகள் இருக்குமாம்...
பூத்தபின் பூக்குலையை வெட்டி அதில் பனங்கள்ளை துளிர்க்கவைத்திருக்கிறார்கள் நூறாண்டுகால சத்து அடர்ந்திருக்கும் என்கிற மருத்துவ நம்பிக்கையோடு.அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்....
தென்னிந்தியாவையும்,இலங்கையையும் தாயகமாக கொண்ட தாளிப்பனை.கம்போடியா,மியான்மர்,தாய்லாந்து,அந்தமான் தீவுகள் எங்கும் அதிக அளவில், காணப்பட்டிருக்கிறது....

இந்தப்படங்களில் சிலவும்,வீடியோ காட்சிகளும் எமக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்,கோபி செங்கப்பள்ளி ரோட்டில் குன்னத்தூர் அருகில் நேற்று எடுக்கப்பட்டது.அப்போது அங்கிருந்த ஒரு சிறுமி தாத்தா நுங்குமரம்தான் இப்படிப் பூத்திருக்குதா எனக் கேட்டது எனக்குள் கவலையை உண்டாக்கியது.பனை மரத்தைக்கூட நுங்குமரம் எனச் சொல்லும் ஒரு வினோத தலைமுறையை உருவாக்கி வருகிறோம்.குறைந்தபட்சம் நம்மால் இதையாவது மாற்றினால்கூட இயற்கைச் சூழலிற்கு நாம் செய்யும் பெரும்பணியாக அது இருக்கும்...
இருப்பதைத் தொலைத்துவிட்டுத்தானே இல்லாதபோது அதை அரிதாக கண்டால்,
அதிசயம்...
தெய்வீகம்...
என வாய் பிளப்போம்.இதை மட்டுமல்ல இனி வரும் காலங்களில் அனைத்து இயற்கை வளங்களையும் காக்கக்கூட வேண்டாம் ஏனெனில் அதுவே தம்மை சரியாக்கி காத்துக்கொள்ளும். இடையூறாகவாவது செய்யாமல் இருப்போம்.இப்படி நீண்டகாலம் பலவிதமான பலன்களை கொடுக்கும் பாரம்பரிய மரங்களை ஒழித்துவிட்டு, குறைந்தகாலமே தாக்குப்பிடிக்கும் அயல்மரங்களை கொண்டுவந்து பிடுங்கி பிடுங்கி நடாமல், இந்த "மண்ணின் மரங்களைக் காப்போம்"...

சிதம்பரம் அருகில்

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

"கற்றுக்கொள்வோம்-அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்"
-என,
Ramamurthi Ram

மேலும் அதிக,
விபரங்கள் மற்றும்,
படங்கள்,
கருத்துப்பரிமாற்றங்களைக் காண...

Saturday, 17 June 2017

அதிரவைக்கும் அணில்...

Indian giant squirrel,
or Malabar giant squirrel,
(Ratufa indica)



இந்திய மலைஅணில்,
நீலகிரி மலைஅணில்,
மலபார் பெரிய அணில்...
எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவை மகாராஸ்டிர மாநிலத்தின் மாநிலவிலங்காக சிறப்பிக்கப் பட்டிருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக காணப்படும் இவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும்.மரத்தின்மீது எப்போதும் தளிர்களையோ காய்களையோ கொரித்துக்கொண்டே இருக்கும் இவற்றின் நிறமே தனி அழகு...

அணில் என்றாலே நமக்குச்சாம்பல் நிறமே நினைவுக்கு வரும் ஆனால் இவை மஞ்சள்கலந்தவெண்மையான அடிப்பகுதியும் பழுப்பும் கறுப்பும் அடர் பழுப்பும் கலந்த பளபளப்பான உடலின் மேல்பகுதியுடன் மனதைக் கவரும் விதமாக இருக்கும். இவற்றுன் வால்தான் எனக்கு குழப்பமாகவே உள்ளது ஆனைமலைப் பகுதிகளில் வால்முழுவதும் அடர்பழுப்பாக இருக்கும் இவற்றிற்கு நீலகிரி பகுதிகளில் வாலின் பாதிக்கும் குறைவான கடைசிப் பகுதி தந்தநிறத்தில் காணப்படும்...

(இது குன்னூர்-நீலகிரியில் கண்டது வாலின் நுனி தந்தநிறம்)

பூனைக்கும் சற்றுக்குறைவான உருவ அமைப்புடைய நன்கு வளர்ந்தவைகள் இரண்டடி நீளமும் இரண்டுகிலோ எடை வரையும் இருக்கும்...

(இது டாப்ஸ்லிப்-ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கண்டது வால் முழுவதும் கரும்பழுப்பு நிறம்)

இவை கத்தும்போது காடே அதிரும்.

அணில்களில் பெரியவகைகள் நான்கு இருந்தாலும் இவை இங்குமட்டுமே காணக்கூடிய ஓரிடவாழ்விகளாகும்.

சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram

Facebook:
https://www.facebook.com/ramamurthi.ram.52

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...