Monday, 6 March 2017

புயலில் ஏன் விழுந்தன மரங்கள்?


புயலில் ஏன் விழுந்தன மரங்கள்?

சென்னையைப் புரட்டிப் போட்ட "வர்தா" புயலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் இரையானதை செய்திகளில் பார்த்தோம். ஆனால் அந்த மரங்கள் ஏன் விழுந்தன என்பதைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா?. 

அந்த மரங்களை யாராவது சற்று உற்று கவனித்தீர்களா?. அந்த மரங்கள் அனைத்தும் இந்த மண்சார்ந்த இயல் மரங்களா அல்லது அயல் மரங்களா?. இந்த மண் சார்ந்த மரங்கள் அவ்வளவு எளிதில் விழ வாய்ப்பில்லை. அப்படியே விழுந்தவைகள் கூட வேர்ப்பிடிப்பு பகுதிகளில் காங்க்ரீட் கலவை கொட்டப்படுவது போன்ற மனிதக் காரணங்களால் வலுவிழந்தவைகளாக இருக்கும். வேரோடு சாய்ந்த மரங்களில் பெரும்பாலானவை தூங்குமூஞ்சி, மேஃபிளவர் போன்ற அன்னிய மரங்களாகத்தான் இருக்கும். இந்த மரங்கள் வரலாறு காணாத வகையில் அளவில்லாமல் விழுந்துவிட்டதையும் பார்த்தோம். இதனால் எவ்வளவு இழப்புகள் பாதிப்புகள். கணக்கற்ற வாகனங்கள் நொறுங்கியது. பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது இது உடனே சரிபடுத்தக்கூடியதா?. இதை முற்றிலுமாக சரிபடுத்த இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?. மரம் விழுந்ததினால் தனிப்பட்டமுறையில் உடமைகளை இழந்தவர்களின் இழப்பை சரிசெய்வது எப்படி?. உடனடியாக தீர்வில்லாத கேள்விகள் இவை. இதற்கெல்லாம் காரணம் நகரத்துக்குள் விரைவாக வளர வேண்டும் என்பதற்காக நடப்படும் அயல் மரங்களே. பாதிப்புகளை முற்றாக தவிர்க்க முடியாவிட்டாலும், ஓரளவாவது பாதிப்புகளை குறைக்க இனியாவது அரசு அமைப்புகள் முயற்சிக்க வேண்டும் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு நமது மண் சார்ந்த இயல் மரங்களை நடுவது நல்லது.

இதுவரை தற்காலிக இழப்புகளை மட்டுமே பார்த்தோம் இனி நீண்டகால பாதிப்புகளையும் இழப்புகளையும் பார்ப்போம்.

பொதுவாக இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் ஏற்படும் பொருள் இழப்புகள், போக்குவரத்து பாதிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு, தகவல்தொடர்பு முடக்கம் போன்றவற்றைத்தான் இழப்புகளாகப் பார்க்கிறோம். மரங்களின் இழப்பு தீவிரமாக நம்மை பாதிப்பதில்லை. அவற்றை இன்னும் பலர் உணரவில்லை. அவை இந்த அளவு வளர எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?. வேரோடு வீழ்ந்த மரங்களின் வேலைகளை இனி யார் செய்வார்?. உணவைக் கூட தொழிற்கூடங்களில் தயாரித்துவிடலாம், ஆனால் காற்றை?. காற்றிலுள்ள உயிர் வளியை யார் உருவாக்க முடியும்?. கரியமில வாயுவை இனி யார் ஆக்ஸிஜன் என்கிற உயிர் வளியாக மாற்றுவார் அல்லது மாற்ற முடியும்?. புவி வெப்பத்தைக் குறைப்பதில் அந்த மரங்கள் செய்த பங்களிப்பை யார் செய்ய முடியும்?. விழுந்த மரத்தின் அளவை உலகளவில் ஒப்பிட்டால் மிக குறைவான எண்ணிக்கைதான் என்றாலும், விழுந்த மரங்கள் செய்த பணியை ஈடுகட்ட நீண்டநாட்கள் ஆகும். ஏற்கனவே சாலை விரிவாக்கம் நகர விரிவாக்கம் என்கிற பெயரில் மரத்தை வகைதொகையில்லாமல் இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமாராக எண்ணூறு கிராம் அளவில் உயிர்வளி தேவைப்படுகிறது. அவற்றை இலவசமாகவே மரங்கள் நமக்குத் தருகின்றன. இதையெல்லாம் மனிதனின் பொருளாதாரக் கணக்கினால் மதிப்பிடவே முடியாது!. ஒரு மரம் பல்லுயிர்ச் சூழலை பேணக்கூடியதாக இருக்க வேண்டும். அதாவது அந்தத் தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவாகவோ அல்லது இருப்பிடங்களாகவோ இருக்க வேண்டும். அயல் மரங்களில் பெரும்பாலானவற்றில் மற்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில்லை. மேலும், மற்ற உயிரினங்கள் அவற்றில் வசிப்பதும் இல்லை. இந்த காரணியை இதுவரை கவனிக்கவில்லையெனில் இனி கவனியுங்கள்.

சரி அவைகள் கெட்ட மரங்களா?. உடனடியாக அந்த முடிவுக்கு வர முடியாது. மரங்களின் பூர்வீகத்திற்கேற்ப, அந்த மண்ணிற்கும், தட்பவெப்ப சூழலுக்கும், அங்கு மட்டும் காணப்படும் உயிரினங்களுக்கும் அந்த மரங்கள் சிறிதளவேனும் பங்காற்றும். அந்தவகையில் அயல்மரங்களாலும் நன்மை உண்டு. அதேமரங்கள் நம் மண்ணில் அதிக நீரை உறிஞ்சும் அல்லது யூகலிப்டஸ் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் போல காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சூழலியல் பாதிப்பு ஏற்படுமளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக மழை குறைவு உள்ளிட்ட தட்பவெப்ப மாற்றங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. சரி இதற்காக என்ன செய்ய வேண்டும்? புயலில் விழுந்த மரங்களை யாராவது கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கையாகக் கொடுத்தால் என்றாவது இந்த நிலைமாறும். அந்தந்த பகுதி சார்ந்த மண்ணின் மரங்களை இனியாவது நடப்பட ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த இது உதவும்.

நகரத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் சமூக காடுகள் வளர்ப்பு என்கிற பெயரில் யூகலிப்டஸ் போன்ற அயல் மரவகைகள் வளர்க்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அவர்கள் வசதி மற்றும் தேவைகளுக்காக தேயிலை, காபி தோட்டங்களும் தேக்கு, பைன், சில்வர் ஓக், ரப்பர் போன்ற மரவகைகள் பயிரிடப்படவும், மேற்குதொடர்ச்சி மலை முழுவதும் மழைக்காடுகள் எனும் சோலைக் காடுகள் அழிக்கப்பட்டது. இதன் விளைவுதான் வற்றாத பல நதிகளை இழந்து தண்ணீருக்காக மற்ற மாநிலங்களின் தயவையோ உரிமையையோ கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதுள்ள பாதிப்பைவிட பாதிப்பின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகக் கூடிய நிலைதான் தற்போது உள்ளது.

நமது மரங்கள்தான் இந்த மண்ணிற்கும், தட்பவெப்ப சூழலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதோடு, ஒன்றுக்கொன்று பயனாகவும் இருக்கும். மரங்கள் உணவையும் இருப்பிடத்தையும் தரும், மற்ற உயிரினங்கள் மரங்களின் விதை பரவலில் உதவும். நம் மரங்கள் தாமதமாகத்தான் வளரும். ஆனால் நீண்டநாட்கள் நிலைத்து நின்று பயனளிக்கும். ஆனால் அயல்மரங்கள் விரைவாக வளரும்; விரைவாகவே விழுந்துவிடும். 

புயலால் மனிதன் உருவாக்கிய கட்டிடங்களை இழந்தால், அது அந்நாட்டுக்கு சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும். அவற்றை விரைவில் கட்டிவிடலாம். ஆனால் மரங்களை இழந்தால் இந்த உலகிற்கே பாதிப்பு. அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது. அதற்கான விஞ்ஞானமும் நம்மிடம் இல்லை. ஏனெனில், மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் இந்த உலகம் முழுமைக்கும் சொந்தம். அதனால்தான் உலகில் எங்கே மரங்களை இழந்தாலும் அதன் பாதிப்பு இங்குவரை நமக்கும் ஏற்படும். எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்ற பாதிப்புகளை சிறிதளவாவது குறைத்திட இனியாவது முன்யோசனையுடன் இந்த மண்ணின் மரங்களை நட்டு உலகிற்கு பயனளிப்போம்.

ஆர்.ராமமூர்த்தி,
சூழலியல் ஆர்வலர்.
"புதியதலைமுறை" இணைய இதழில் எமது இந்தப்பதிவின் இணைப்பு:


வரையாடுகள் வருத்தமளிக்கும் எண்ணிக்கை



வரைமுறையில்லாமல் அழிக்கப்பட்ட வரையாடுகள்...

சங்க காலத்தில் இந்த வரையாடுகளை மரையா,
வருடை 
எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,காடுவாழ் உயிரினமாய் இருந்தாலும் தமிழ்சமுதாயத்தோடு இது மிக நெருங்கியிருந்ததை அறியலாம்...

நம்ம ஊரிற்கு மட்டுமே உரித்தான,உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாதவைதான் நம்ம ஊரு வரையாடுகள்...




இப்படி ஒரு உயிரினம் உலகில் குறிப்பிட்ட ஒருபகுதிகளில் மட்டுமேகாணப்படும் சிறப்புத்தன்மை கொண்டவைகளை ஓரிடவாழ்வி(Endemic) என்பார்கள்.அதாவது உலகில் ஓரிடத்தில் மட்டுமே வாழக்கூடியவை...

இப்படிப்பட்ட சிறப்புத்தன்மை கொண்டதுதான் நமது தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு.வரை என்றால் சறுக்கும் பாறை எனப் பொருள்படும்.பெயரிற்கேற்ப மலைச்சிகரங்களின் உயர்வான பாறைச் சரிவுப் பகுதிகளையே தமது வாழிடமாக கொண்டுள்ளன...




காட்டாடுகளிலேயே உருவமைப்பில் பெரியவை இந்த வரையாடுகள்.இதன்பினோக்கி வளைந்தகொம்பில் வரிவரியான வளையங்கள்போல் வரிகள் இருக்கும்,இதன் உடல்நிறம் பாறைகளையொத்த நிறத்தில் பொருந்தி(camouflage)எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவில் இருக்கும்.ஆண் மற்றும் பெண் ஆட்டிற்கும் கொம்புகள் உண்டு. மலையாடான இமாலய ஆட்டினைவிடப உருவில் பெரியது  இவை.ஆண்ஆட்டைவிட பெண்ஆடு சிறியவையாக இருக்கும்...

இவற்றின் இன்றைய நிலை ஆழ்ந்த கவலைக்குரியது.இருநூறு ஆண்டுகள் இந்தமண்ணை ஆக்கரமித்த அன்னியர்கள் இயற்கைக்கு மட்டும் தீராத பாதிப்பைச் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.மலைப்பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை,காபி,யூகலிப்டஸ்,பைன் போன்ற இந்த மண்ணுக்குதவாத மலட்டுமரங்களை பயிர்செய்தபின் பார்க்கப் பசுமையாக உள்ள பசும்பாலைவனங்களாக மாற்றிச் சென்றதால் புல்வெளிப் பரப்பு குறுகிக் கொண்டே வந்து இப்போது கேரள தமிழக பகுதிகளில்உள்ள வனங்களில் புல்வெளிக் காடுகள் சிறு சிறு தீவுகளைப்போல் ஆகிவிட்டதால் வரையாடுகளின் வாழிடமும்  சிதறி சிறு சிறு குழுவாக பிரிந்துவிட்டது.இதனால் மேம்பாடுடைய தன்மையிலான வரையாடுகள் உருவாவது என்பது சவாலான விசயமாகிவிட்டது...


துப்பாக்கியோடு வந்த வெள்ளையர்களுக்கு பொழுதுபோக்கு சிவிங்கிப்புலி வேட்டையைப் போலானது வரையாடு வேட்டையும் பல்லாயிரக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை நல்ல வேளையாக ஓரிரு ஆயிரங்களில் மிஞ்சியது...

பிறகு நம்ம ஆட்களும் இறைச்சிக்கும் தோலிற்கும் கொன்றதோடு புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் இரையாகி எண்ணிக்கையளவு சில நூறானது. வனவிலங்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப் படுத்தியதால் 2014 வருடகணக்கெடுப்பின்படி சுமார் இரண்டாயிரத்துஐநூறுறிற்கு மேலாகிவிட்டது ஓரளவு ஆறுதலான விசயம்.ஆனாலும் இன்றும் மனிதர்களால் கள்ளவேட்டை தொடர்வதாகவே சொல்லப்படுகிறது...




தற்போது தமிழகத்தில் வால்பாறை,களக்காடு,மேகமலை,நீலகிரி பகுதிகளிலும் கேரளவனப்பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது....

இவற்றின் சிறப்பியல்பே செங்குத்தான மலைச்சரிவுகளில் திறமையாக ஓடுவதும்,விளையாடுவதும்,சண்டையிடுவதுமே அதற்கான வகையில் இதன் கால்களின் அமைப்பு உள்ளது.ஓய்வெடுக்கவும் பாதுகாப்பிற்காகவும் பாறைப்பிளவுகளையே தேர்ந்தெடுக்கின்றன...



பொதுவாக வரையாடுகள் மனிதர்களைக்கண்டால் அச்சப்பட்டு கூச்சப்பட்டு மறைந்துவிடும் ஆனால் வால்பாறை ரோட்டில் நான்காவது வளைவிலிருந்து பனிரெண்டாவது வளைவுவரை சாதரணமாகப் பார்க்கலாம்.மனிதர்களைக் கண்டுகொள்வதே இல்லை...

சாலையோரத்திலேயே இவைகள் மேய்வதால் வாகனப்புகையினாலும் வளர்ப்பு கால்நடைகளை வனத்திற்குள் மேய்ச்சலுக்கு விடுவதாலும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் நிலை இருக்கிறது...


இந்த சிறப்புமிக்க உயிரினத்தை காப்பது அரசிற்கும் வனத்துறைக்கும் மட்டுமல்ல நம் அனைவருக்கும் மிகப் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து  இதன்வாழிடங்களைச் சுருங்காமல் பாதுகாத்து,இவற்றிற்கு இடையூறு செய்யாமல் பாரம்பரியம் மிக்க நமது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல்லுயிர்ச் சூழலைக் காப்போம்...

சூழலியல் ஆர்வத்துடன்.
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi

எமது முகநூல் பதிவின் இணைப்பு: https://m.facebook.com/story.php?story_fbid=1123696621079705&id=100003181323647

கருவேலமரங்கள் காக்கப்படவேண்டும்

நமது நாட்டின் மரமான கருவேலமரம்.

கருவேலம்பூ

ஆடுகள் விரும்பி உண்ணும் 
கருவேலங்காய்

நாட்டுக்கருவேலங்காய்க்கும் சீமைக்கருவேலங்காய்க்கும் உள்ள வேறுபாடு



மரங்களை அறிவோம்

கருவேலமரம் வளர்ப்போம்...

கருவேலமரங்களை ஒழிக்கச் சொல்லி ஊரே குரல்கொடுக்குது ...இது என்ன புதுசா ?...

நான் சொல்லப்போகிறது பல ஊடகங்களும் பலரும் நினைக்கிறமாதிரி கருவேலமரம் ஒன்றும் மோசமான தீமையான மரமில்லை மாறாக மிகுந்த மருத்துவகுணம் கொண்டது!...

நான் குறிப்பிடுவது "கருவேலமரம்"
அதாவது நாட்டுக் கருவமரம் அல்லது கருவேலமரம் அதை இந்தியில் Babul என்கிறார்கள் அது அப்படியே ஆங்கிலத்தில் Babul tree எனப்படுகிறது(இதைமூலப்பொருளாக்க் கொண்டு ஒரு பிரபல நிறுவனம் இதேபெயரில் நீண்டகாலமாக பற்பசை மற்றும் பல்பொடி தயாரித்து வருகிறது)...

தீமை என்று சொல்லப்படுவது ...
சீமைக் கருவேல மரம்,
வேலிக்காத்தான்,
சீமைக்கருவை,
டில்லிமுள்,
வேலிச்செடி,
சீமை உடை...
என பகுதிக்கு ஒரு பெயரில் இது அழைக்கப்படுகிறது....

நமது தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica),
வெளிநாட்டில் இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும்(Prosopis juliflora) போட்டு ஒன்றாக குழப்பிக்கொள்ளக்கூடாது இந்தக் குழப்பத்தை தமிழ் பத்திரிக்கைகளே உருவாக்குகிறது என்பதுதான் கொடுமை...

இனி நமது மண்ணின் மரமான கருவேலமரத்தைப் பற்றிப் பார்ப்போம்...

கருவேல் ஒரு உறுதியான மரம். சுமார் 25 அடி முதல் 30அடி உயரம் வரை வளரக்கூடியது. தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும்,மலைகளிலும் வளரக்கூடியது. வறட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது. இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 - 12இலைகளையுடையது, காய் சுமார் 6அங்குல நீளமுடையது அதில் 8 -12கொட்டைகள் இருக்கும். இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரபட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் அடர்ந்த மரக்கலராகவும் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.

மனிதனுக்கும் மருந்தாகப் பயன்படும் இது...

கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சல் தணிக்கும்,காய்ச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல்,மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும்,கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத் துவளச்செய்யும்,சளியகற்றும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.
துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சில் பாஷண மருந்து வீறு ஆகியவை தீரும்.
இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.
இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டடு வர இரத்தக் கழிச்சல்,வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.
பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

அட வேறொன்றும் இல்லைங்க...

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"

-இதிலுள்ள வேல்தான் நம்ம கருவேல மரம்....
இதுபற்றி தெரிந்த வியாபாரிகள் இதை மூலப்பொருளாகக் கொண்டு பற்பசை,பொடிகளைத் தயாரித்து காசு பார்க்கிறார்கள்...

காய்கள் காய்ந்த பின் சலங்கைபோன்ற சப்தம் எழுப்பும்....

குளங்களில் நீரிற்குள்ளும் தாங்கிநிற்பதால் நீர்ப்பறவைகள் பாதுகாப்பான கூடுகளை அமைத்துக்கொள்ள இந்தமரத்தை தேர்ந்தெடுப்பதை பார்க்கலாம்...

ஏர்கலப்பை செய்வதற்கு
இந்தமரத்தைத்தான் முக்கியமாகத் தேர்வு செய்வார்கள் ஏனெனில்  நாள்பட நாள்பட இது இறுகி வலிமையாகும்....

மொத்தத்தில் தமிழரின் வாழ்வில் பிரிக்கமுடியாத மரம் இது....

சூழலியல் ஆர்வத்துடன்.
Ramamurthi Ram

எமது முகநூல் பதிவின் இணைப்பு:
https://m.facebook.com/story.php?story_fbid=1129287587187275&id=100003181323647



Sunday, 5 March 2017

வர்தாவில் விழுந்த மரங்கள் உணர்த்துபவை என்ன ?


புயலில் ஏன் விழுந்தன மரங்கள் ?

சென்னையில் நேற்று போட்டுத்தாக்கிய "வர்தா" புயலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டதாக செய்திகளில் பார்த்தோம்....

அந்த மரங்களை யாராவது சற்று உற்று கவனித்தீர்களா ?...
அந்த மரங்கள் அனைத்தும் இந்த மண்சார்ந்த இயல்மரங்கள்தானா ?
அல்லது இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து எப்போதோ, யார்மூலமோ , எந்தக்காரணத்தினாலோ இங்குவந்து சேர்ந்த அயல்மரங்களா ?....

இந்தமண்ணின் மரங்கள் அவ்வளவு எளிதில் விழ வாய்ப்பில்லை...
அப்படியே விழுந்தவைகள்கூட வேர்ப்பிடிப்பு பகுதிகளில் காங்கிரீட் போன்றவைகளால் அதாவது மனிதக் காரணங்களால் வழுவிழந்தவைகளாக இருக்கும்...

விழுந்தவைகளில் பெரும்பாலானவை தூங்குமூஞ்சி,மே ஃபிளவர் போன்ற அன்னிய மரங்களாகத்தான் இருக்கும்....

மற்ற இழப்புகளைத்தான் இழப்புகளாகப் பார்க்கிறோம் மரங்களின் இழப்பு தீவிரமாக நம்மை பாதிப்பதில்லை.அவற்றை இன்னும் பலர் உணரவில்லை.அவை இந்த அளவு வளர எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ? அதுசெய்த வேலைகளை இனி யார் செய்வார் ?....

உணவைக்கூட தொழிற்கூடங்களில் தயாரித்துவிடலாம் ஆனால் காற்றை. காற்றிலுள்ள உயிர்வளியை யார் உருவாக்க முடியும் ? கரியமிலவாயுவை இனி யார் ஆக்ஸிஜன் என்கிற உயிர்வளியாக மாற்றுவார் அல்லது மாற்றமுடியும்? 
விழுந்த மரங்கள் குறைத்த புவிவெப்பத்தின் பங்கை யார் இனிக் குறைப்பார்கள்?...

இதையெல்லாம் கணக்கிட்டால் மனிதனின் பொருளாதாரக்கணக்கினால் மதிப்பிடவேமுடியாது!...

இனி அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவார்களா ? அப்படியே நட்டால்கூட இந்த மண்ணின் மரங்களை நடுவார்களா ?இதை யார் நடக்கூடிய மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வது ?....

சரி ஏன் அயல் மரங்களை நடக்கூடாது ?
ஒருமரம் இருந்தால் முதலில் உயிர்ச்சூழலை பேணக்கூடியதாக இருக்கவேண்டும்.அதாவது அந்தத் தாவரங்கள் மற்ற ஏனைய உயிரினங்களுக்கு உணவாகவோ அல்லது இருப்பிடங்களாகவோ இருக்க வேண்டும். அயல்மரங்களில் பெரும்பாலானவற்றில் மற்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில்லை மேலும் அவற்றில் வசிப்பதும் இல்லை! இதுவரை கவனிக்கவில்லையெனில் இனி கவனியுங்கள்...

சரி அவைகள் கெட்ட மரங்களா ? அப்படியெல்லாம் முடிவெடுக்க முடியாது அவற்றின் பூர்வீகத்திற்கேற்ற மரங்கள் அவை அந்த மண்ணிற்கும்,அந்த தட்பவெப்ப சூழலிற்கும் அங்குமட்டும் காணப்படும் உயிரினங்களுக்கும் ஏற்றவைகள் அவை எனவே அந்தப்பகுதிக்கு மிக நன்மை செய்யும் மரங்களே...

சரி இதற்காக என்ன செய்ய வேண்டும் ? புயலில் விழுந்த மரங்களை யாராவது கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கையாகக் கொடுத்தால் என்றாவது இந்தநிலைமாறும்.
இந்தமண்ணின் மரங்களை இனியாவது நடப்பட ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவாவது உதவும்...

நமது மரங்கள்தான் இந்த மண்ணிற்கும் தட்பவெப்ப சூழலிற்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதோடு ஒன்றிற்கொன்று பயனாகவும்  இருக்கும்.மரங்கள் உணவையும் இருப்பிடத்தையும் தரும் மற்ற உயிரினங்கள் மரங்கள் பரவ விதைபரவலில் உதவும்... 

நம் மரங்கள் தாமதமாகத்தான் வளரும் ஆனால் நீண்டநாட்கள் நிலைத்துநின்று பயனளிக்கும்.ஆனால் அயல்மரங்கள் விரைவாக வளரும் விரைவாக விழுந்துவிடும் கவனியுங்கள் தெரியும்!...

புயலால் மனிதனால் உருவாக்கி கட்டிடங்களை இழந்தால் அது ந்நாட்டிற்கு மட்டும் சிறிய பாதிப்பு அவற்றை விரைவில் கட்டிவிடலாம்.ஆனால் மரங்களை இழந்தால் இந்த உலகிற்கே பாதிப்பு அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது அதற்கான விஞ்ஞானமும் நம்மிடம் இல்லை...

உணர்ந்து மரங்களை மதிப்போம் :)
நன்றியுடன் உங்கள் ராமமூர்த்தி...


கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் நாட்டிற்குதான் தேவை காட்டிற்கல்ல

இழப்பின்வலி இழந்தவர்களுக்குத்தான் தெரியும்...

மனிதனுக்கு தன்னால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருப்பதாக நினைப்பு,அதன் விளைவாகத்தான் என்னவோ எந்த விலங்கைக் கண்டாலும், அவற்றிற்கு உணவளித்து காப்பாற்றவேண்டும் என்கிற பொறுப்பும்,பாசமும் எங்கிருந்தோ வந்துவிடுகிறது...

அப்போதைக்கு பெரும்பாலான மனிதர்கள் என்ன தின்றுகொண்டிருக்கிறாகளோ,அதற்கு அந்த தீனியின் மிச்சத்தைப் போடுவது...

அதுவும் காடுகளிடையே செல்லும் முக்கிய ரோடுகளில் சொல்லவே வேண்டாம் அங்கே ரோட்டோரத்தில் காணும் குரங்கானாலும் சரி மான்களானாலும் சரி அருகே தமது வாகனத்தை நிறுத்தி உணவுகொடுப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன் கேட்டால் அவற்றைப்பார்த்தால்  பாவமாக இருக்கிறதாம்...

உடனே நான்...
இன்னும் சற்று உள்ளே சென்று பாருங்கள் இரண்டு புலிகள் நான்கு நாட்களாக எதுவும் கிடைக்காமல் இருக்கிறது அதற்கு எதாவது வைத்திருக்கிறீர்களா?!...
அப்போது அவர்கள்முகத்தைப் பார்க்க வேண்டுமே!...

நீ அவைகளுக்குப்பின்னரே இந்தப்பூமியில் பிறந்தவன்,நீ பிறப்பதற்கு முன்புகூட அவை உணவை உண்டு கொண்டுதான் இருந்தது...

இப்படியே பழக்கப்பட்டு விட்டதால் இயற்கையாக உணவுதேடும் பண்பையே இழந்துவிடுகிற அபாயத்தில் உள்ளன.அதனால் எந்தநேரமும் ரோட்டோரத்திலேயே வருகிற வாகனங்களை உணவுக்காக எதிர்பார்த்து பிச்சைஎடுப்பதுபோல் காத்துக்கிடக்கின்றன...

இந்த உணவுகளைத் தின்பதின் விளைவாக அவற்றிற்கு தோல்நோய் உட்பட பல நோய்கள் உண்டாகிவிட்டன. ரோட்டோரத்திலிருக்கும் மான்களையும் காட்டிற்குள் இருக்கும் மான்களையும் கூர்ந்து கவனித்தால் இந்த வித்தியாசங்கள் தெரியும்...

நாம் உணவளித்துக் கொண்டிருக்கும்  போது நம்மைத்தாண்டி வேகமாகச் செல்கின்ற வாகனங்களில் அடிபட்டு கை,கால்கள் மற்றும் வாலினை இழந்த பல குரங்குகளை பார்க்கலாம்...

நான் சொல்ல வந்தது இப்படத்திலுள்ள குரங்கின் குட்டியைப் பற்றியது. மசினங்குடிதாண்டி ஊட்டிவருகிறவழியில்
அப்படி ரோட்டோரத்தில் உணவிற்காக தாய் கையேந்தி நின்றபோது விலகிச்சென்ற வாகனத்தில் குட்டி மரணித்துவிட்டது.குட்டி செத்ததைக்கூட உணராத தாய் பாசத்தின் விளைவாக கடந்த மூன்றுநாட்களாக தூக்கிச் சுமந்துகொண்டே சுற்றிவருகிறது...

அதன் முகத்தைப் பாருங்கள்...
குட்டி குடிப்பதற்காக பால்சுரந்த முலைகளைப் பாருங்கள்...

மனிதனுக்கு அகங்காரம் எப்பொழுது தொலைவது?

வால்பாறையில் கூச்சம் நிறைந்த சோலை மந்திகள் (சிங்கவால் குரங்கு) இப்போது சாலையோரத்தில் பிச்சையெடுக்கிறது,திம்பம் மலைப்பாதையில் இப்போது அனுமன்குரங்கு எனப்படும் கிரே லங்கூரும் பிச்சை எடுக்கிறது. தெப்பக்காடு தாண்டியதும் சாலையோரத்தில் மான்களும் எதையோ எதிர்பார்த்து நிற்கிறது...

மனிதா....
அதற்கு எண்ணெய்யும்,காரமும் உப்பும்,மசாலாவும்,சர்க்கரையும்,மைதாவையும் சேர்த்துச் செய்த ரசாயன உணவுகளைக்கொடுத்து,
அவற்றை உன்னைப்போலவே நோயுடன் திரியச் சொல்கிறாயா?...

உனக்கு உண்மையிலேயே விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்குமானால்
மரங்களை நடு...
மரத்தை வெட்டுபவனிடம் சண்டைக்குப் போ...
மரங்கள் காப்பாற்றப்பட்டால் "கனிகள்"
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகுமல்லவா...
கொட்டைகள் மூலம் விதைகளும் பரவும்,காடுபெருகி மழையும் பெய்யும்...
புவியும் குளிரும்...

சுரந்து நிற்கும் பால் அதைக்குடிக்க குட்டி உயிரோடு இல்லை.
மூன்றுநாட்களாக இறந்த குட்டியை பாசத்தோடு தூக்கிக் கொண்டே சுற்றும் தாய்...
இயல்பிலேயே மிகவும் கூச்ச சுபாவம் உடையதும் உயரமான மரச்சிவிகைகளில்  மட்டுமே வாழக்கூடியதுமான சோலைமந்திகள் இன்று   வால்பாறை நகரிற்குள் உணவுதேடி சாம்பார் பொட்டலத்தை பிரித்துக்கொண்டிருக்கிறது.இது ஒரு கையை இழந்த குரங்கு... 
இந்த நிலைக்கெல்லாம்  காரணம்,  மனிதர்களின் அறியாமையும் பேராசையும்தான்....

சூழலியல் ஆர்வத்துடன்.

   Ramamurthi Ram

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...