Tuesday, 16 May 2017

காற்றே என்ன விலை ?



மனிதர்கள் வாழ்வு உணர்ச்சிகளின் அடிப்படையிலானது இந்த மரங்களை  மாற்றிடங்களில் நடுவதுகூட உளவியல் தொடர்பானதுதான்...
தலைவர்களுக்காக தற்கொலை செய்வதும் பிடித்த நடிகரிற்காக அலகு குத்துவதும் கூட இது மாதிரி உணர்ச்சிகளின் அடிப்படையில்தான்...
காடுவழியே போகும் ரோட்டில் பயணிக்கும் போது வண்டியை நிறுத்தி வழியில் காணும் குரங்கிற்கும்,மான்களுக்கும்., சமோசாவும்,மெதுவடையும் கொடுக்கும் நபரிடம் கேட்டால் பாவம் அதுகள்...
உணவிற்கு என்ன செய்யும் ?...
இவர்களுக்கும் மரம்பிடுங்கி மாற்றிடத்தில் நடுகிற மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
கருணை என்கிற உணர்ச்சியின் காரணமாகவே இந்த செயல் நடக்கிறது....

ஆனால் இன்றைய நாளில், சீறும் கடலில் சிக்கிக் கொண்டிக்கும் நம்மைக் காப்பாற்ற ஓட்டைப் படகுகளால் ஒன்றும் செய்ய இயலாது.தொழில் புரட்சிங்கற பேர்ல தன்னைத்தானே தின்ன ஆரம்பிச்சிட்டோம்.இந்த நாகரீக கோமாளிகளின் தயவால் இந்த கிறுக்குப் புரட்சிக்கு அப்புறம் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு நாற்பத்தி நான்கு மடங்கு  அதிகரித்திருக்கிறது.அதுவும் கடந்த பத்தாண்டுகளில் இதன் வேகம் ராக்கெட் வேகம்...
இதே வேகத்தில் போனால் இன்னும் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஊரைவிட்டே அல்ல இந்த தகிக்கும் உலகைவிட்டே ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்....
அதன் தீவிரதன்மையின் வெளிப்பாடுதான் அதிவெப்பம்,காலநிலைமாற்றம்.
மழையே பெய்வதில்லை...
அல்லது மிகுமழை...
பருவ மழையோடு அடைமழையை காணோம்...
காற்றெல்லாம் கரி....
இதையெல்லாம் சுத்தம் செய்வதுயார் ?

பூமிக்கு மரங்களே நுரையீரல்.அதுவே காற்றை சுத்தப் படுத்துகிறது. இந்த வேலையை எந்த தொழிற்சாலையிலும் செய்ய முடியாது....
33%காடுகள் கட்டாய அளவு ஆனால் இன்றைய நிலை 15%கீழாக போய்விட்டது...
நாம் செய்யும் தவறுகளால் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு...

மரங்களை நடுவதுதான் அத்தனை மனிதர்களுக்கும் முழுநேர வேலையாக கட்டாயமாக்கவேண்டிய அவசர காலத்தில் இருக்கிறோம்...
இந்த எமர்ஜென்ஸி நேரத்தில் ஊரெல்லாம் சேர்ந்து ஒற்றை மரத்தை ஊனமாக்கி புகை கக்கும் பெரிய பெரிய இயந்திரங்களை வைத்து பிடுங்கி நட மாற்றிடம் தேடிக்கொண்டு...
செல்பிஎடுத்து நாளிதழில் படங்களை தேடும் வேலையில் இருக்கிறோம்...
ஒரு ஊரில் ஆரம்பித்தது இன்றைக்கு பல ஊர்களில் தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது...

பிடுங்கி நடுகின்ற ஆர்வலர்களிடம் கேட்டேன் "பிடுங்கி நடுவதில் உங்கள் நோக்கம் என்ன ?
பயன்கள் என்ன ?"-குழப்பத்துடனே பதில்வருகிறது...

நடப்படவேண்டியது குற்றுயிரும் குலை உயிருமான வேரும் கிளையும் வெட்டப்பட்ட ஒற்றை மரங்களல்ல.கோடிக்கணக்கான ஏக்கர்கள் பரப்பில் பலவிதமான புதிய மரங்களைத்தான்.பல புதிய காடுகளை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.கொஞ்சமாக இருக்கிற ஆர்வலர்களும் ஊனமாக்கிய மரங்களை கிரேன்களில் தூக்கிக்கொண்டு அலைவதுதான் வேதனை...

உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்படுவோம்-பூமிப்பந்தில் வாழும் சூழலை உருவாக்குவோம்.
"செய்கிற செயலை பெரும் பயனுள்ளதாக்குவோம்"...

(இந்தப்படத்தை உருவாக்கிய அந்தப் பெயர் தெரியாத சிந்தனைக் கலைஞனுக்கும் இராகவன் சிவராமன் க்கும் நன்றிகள்)

நமது முகநூல் பதிவுகளுக்கு :
https://www.facebook.com/ramamurthi.ram.52

Friday, 12 May 2017

பில்லாய் மான்

பில்லாய்....



அதபாருங்...
ஆனெய்ங்க பக்கத்துள நிக்கறதெல்லாம் பில்லாய்ம்மானுங்...
-என்னிடம் அங்கு மீன் பிடிக்கிற பரிசல்கார நண்பர் சொன்னது.
என் வாழ்வில் முதன்முதலாய் வனச்சூழலில் இதை பார்த்தது அங்கேதான்...

எமது ஊரிற்கு மிக அருகில் சிறுமுகை பகுதியில்
பவானிசாகர் அணைக்கு பின்பக்கமா பவானிநீர் வந்து சேருகிற இடம் கரையிலிருந்தே காட்டின் துவக்கம் ஆரம்பிக்கும். மாலைநேரத்தில் யானைகளோடு,கடமாக்களும்(Indian Gaur),கடமான்களும்(sambar deer),புள்ளிமான்களும்(spotted deer),காட்டுப்பன்றிகளும்(wild boar) இவற்றோடு அங்குள்ள மக்களால் பில்லாய் எனப்படுகிற தற்போது அரிதான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புல்வாய்மான்களும்(Black Buck)தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்...



(Black Buck)
புல்வாய்...
புல்வெளிமான்...
வெளிமான்...
முருகுமான்...
திருகுமான்...
திருகுகொம்புமான்...
கலைமான்...
கருஞ்சிக்கிடாய்(ஆண்)...
இப்படி பல பெயர்கள் உண்டு.ஒரே விலங்கிற்கோ பறவைக்கோ இப்படி பல பெயர்கள் இருப்பதென்பது இந்த மக்களிடையே மிக நீண்ட தொடர்புடையது என விளங்கும். சங்க இலக்கியங்களில் இரலைமான் என குறிப்பிடப்படும் இது,சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே இதன் தொடர்பின் சான்றாக கொற்றவையின் வாகனமாக  சிலைகள் உள்ளன். இதன் தாய் நிலமும் இந்திய மண்தான்...



ஒரு காலத்தில் இந்த துணைக்கண்டம் எப்படி இருந்தது என கற்பனை செய்து பாருங்கள்.,
நீண்ட தொலைவு இடைவெளியில் மனிதக் குடியிருப்புகள். சிமென்டையும் சுண்ணாம்பாலும் கட்டப்படாத எளிமையான வாழ்விடங்கள்.சுய தேவைக்காக மட்டும் கொஞ்சமான விவசாய நிலங்கள்.மற்ற இடமெங்கும் காடுகள்....
காடுகள்....
அந்தக் சமவெளிகாடுகளில்
எங்கு நிறைந்த வெளிமான்கள் அதை அடித்துண்கிற
சிவிங்கிப்புலிகள் இவற்றோடு அனைத்துவிதமான விலங்குகளும்.எப்படி இருந்திருக்கும்? அந்தச்சூழல் அற்புதமல்லவா!!!....



எங்கும் பரவியிருந்த இவற்றை மன்னர்களும்,மக்களும் போட்டிபோட்டுக்கொண்டு, மாமிசத்தில் மருத்துவகுணம் இருக்கிறது, கொம்புகளில் மந்திரசக்தி இருக்கிறது,தோலில் அமர்ந்து தியானம் செய்கிறோம் என தாறுமாறாக கொன்ற நிலையில் ஒண்டவந்த இங்லீஸ்காரனும் வீரம்,பொழுதுபோக்கு என அவனவன் பங்கிற்கு சுட்டுச் சுட்டு தின்றுவிட்டான்...

இன்றைக்கு இங்கே தரைவாழ் விலங்குகளில் மிக வேகமாக ஓடக்கூடியது இந்த வெளிமான்கள். வேகம் மணிக்கு 80 கி.மீ. மேல்.இதை உண்ணும் சிவிங்கிப்புலிதான் மிக வேகம் மணிக்கு 120 கி.மீ...
இன்று சிவிங்கிப்புலி இந்திய மண்ணிலேயே இல்லை.சமவெளிக் காடுகள் என்பது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இந்தப் புல்வாய்களின் வாழிடம் என்பது தமிழகத்தில் மூன்று நான்கு இடங்கள் அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி தீவுபோன்ற குறுகிய,சவால் நிறைந்த வாழிடமாகிவிட்டது என்பது மிக வேதனை...

கோடியக்கரை கடற்கரையை ஒட்டி வெளிமான்கள் வாழிடமான இந்தப் பகுதி, இன்றைய நிலை, இருக்கிற குறுகியபரப்பில் சீமைக்கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பே அதிகம்.அதிக அளவில் நீர்குடிக்கும் இவற்றிற்கு இயற்கையான நீர்நிலைகள் அற்ற நிலையில் உணவும் நீரும் பற்றாக்குறையில் பரிதாபமான நிலைதான்...
அடுத்ததாக திருநெல்வேலிக்கு அருகில் வல்லநாடு வெளிமான் வாழ்விடம்.இங்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனவாம்...
கிண்டியிலுள்ள தேசியப் பூங்கா.சென்னை நகரத்தின் நடுவில் இதன் வாழ்வு என்பது பரிதாபம்தான்...
இருப்பதிலேயே நல்ல சூழல் உள்ள இடமென்றால் அது நமது சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியான, மோயாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிதான்.சீகூர்,தெங்குமரஹாடா முதல் சிறுமுகை வரையான சமவெளிபகுதிகளில் காண முடிகிறது....

அடர்ந்த காடுகளில் இவை வாழ விரும்பாததற்கு காரணம் அங்கு புற்கள் குறைவு பாதுகாப்பும் குறைவு அதனாலேயே புல்வெளிக்காடுகளையே வாழிடமாக தேர்ந்தெடுத்திருந்தன....

ஆண் அடர்ந்த கரும்பழுப்பு நிறத்துடன் நீண்ட வளையவரிகளுடைய கொம்புகளோடு காணப்படும்.பெண் செம்பழுப்பாக கொம்புகளற்று ஆடுகளைப்போல் காணப்படும்.இணையைக் கவர ஆண்களிடையே பலத்த சண்டை நடக்கும்.கொம்புகள் மோதும் சத்தமே பயங்கரமாக இருக்கும் கோடியக்கரையில் நடந்த சண்டையினை நான் படம்பிடித்த வீடியோவை இணத்துள்ளேன்  பாருங்கள். மான்களைப்போல் இவற்றிற்கு கொம்புகள் விழுந்து முளைப்பதில்லை.வாழ்நாள் முழுவதும் ஒரே வலிமையான கிளைகளற்ற கொம்புகள்தான்.அதனாலேயே மான்களிலிருந்து வேறுபடுத்தி இரலைகள் என்கிறார்கள்.இவையும் இருநிலை செரிமானத் தன்மையுடைய அசைபோடும் விலங்கு...




எஞ்சிய நிலையில் இருக்கும் கொஞ்சமான வெளிமான்களையும் மாமிசத்திற்காகவும்,தோலிற்காகவும் கொம்புகளுக்காகவும் கொல்லப்பட்டு வருகிறது.இந்தி நடிகன் சல்மான்கான் ராஜஸ்தானில் வேட்டையாடியது இந்த வெளிமானைத்தான். இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உலகமே அறியும்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியும் இந்த வெளிமானை வேட்டையாடியதற்காத்தான் தண்டனை கிடைத்தது(இப்படி அறிமுகம் செய்யவேண்டியதாக இருக்கிறது)....

இந்த தண்டனைகளுக்குப் பிறகே வேட்டைகள் குறைந்தன ஆனாலும் கள்ளவேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் கோடியக்கரையில் கொம்புகளை கைப்பற்றியபோது வெளிச்சமாகிவிட்டது...



இதே நிலை தொடர்ந்தால்... தாய்நிலத்தில் இருந்து மனிதர்களால்  சுத்தமாக ஒழிக்கப்பட்ட "சிவிங்கிப்புலி" ஒரேயொரு ஜோடிக்காக,ஈராக்கிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்,இதற்கும் அந்தநிலை ஒருநாள் வரலாம். இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் ???...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

இன்னும் விரிவான பதிவுகள் எமது முகநூலில்...
இணைப்பு:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 9 May 2017

கழுதையும் நானும்...

கழுதையும் நானும்...



இவரைத் தெரிகிறதா உங்களுக்கு ?
இவரைப்பற்றி ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பலர் அறிந்திருக்கலாம் பல விதத்தில் நம்மோடு வாழ்ந்தவர்தான் நம்ம கழுதையார்....

மனிதநாகரீக  வாழ்வில் பல படிகளை ஏற்றிய பெருமையில் இவருக்கும் பங்கு உண்டு. ஆனால் ஏதோ காரணத்தால் இவரை(இனி இதை எனவே விளிப்போம்)மரியாதைக் குறைவான ஒப்பீட்டிற்கும், உதாசீனப் படுத்துவதற்கும், ஒருவரை அவமானப் படுத்துவதற்குமே கழுதைகள் உவமையாக மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்...

இவற்றின் மரியாதையை நிமிர்த்த சகோதரர் கோவை சதாசிவம் தமது நம்ம கழுதை நல்ல கழுதை புத்தகத்தில் கடும் முயற்சி செய்திருக்கிறார் அனைவரும் வாங்கிப் படியுங்கள், அதை வீட்டில் வைத்திருங்கள் எதிர் காலத்தில் உதவும்....


எமது சிறிய வயதில் பல விதத்தில் இதைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று எமது கிராமத்திற்கு வருடம் தவறாமல் கோயமுத்தூரிலிருந்து நீண்ட கோடை விடுமுறைக்கு வரும் ஒரு பையன் தவறாமல் இதன் வாலில் தகற டப்பாவையோ அல்லது பனை ஓலையையோ கட்டிவிடுவான் அது அதற்குப்பின் ஒரு ஓட்டம் எடுக்குமே  அது எப்போது முடிவுற்றது என எனக்குத் தெரியாது.அதன் ஓட்டம் எப்போது நிற்கும் என எண்ணியே பல நாட்கள் நான் தூக்கத்தை தொலைத்து துக்கமாகியதுண்டு....



எங்களது பக்கத்து நிலத்திலோ இதற்கு நடக்கும் கொடூரம் மிக அபாயமானது அந்த நிலத்தின் உரிமையாளர் தமது காட்டிற்குள் கழுதை வந்தாலே அதை குத்தீட்டியால்(வேல் போன்ற முனையுடைய நீண்டமூங்கில் குச்சில் பொருந்தியிருக்கும் ஆயுதம்)குத்தி விடுவார் கழுதையின் உரிமையாளர் அதாவது எங்கள் ஊரில் சலவைசெய்யும் வண்ணார் எனப்படுபவரே இதை வைத்திருப்பார் ....
அவர் அதற்கு ஏற்ப்பட்ட நிலையைக் கண்டு மனம் வருந்தி பேசாமல் செல்வதை எம்மால் அந்தச் சிறிய வயதிலும் உணர முடிந்தது.அதாவது இன்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்னர்....



எமது பள்ளிக்கூட காலத்திலோ இன்னும் பலவிதங்களில் கழுதைபற்றி மிக மட்டமாகவே மனதில் ஏற்றப்பட்டது அதுவும் அப்போதைய ஆசிரியர்களால்....
"ஏண்டா கழுதை"
"ஏண்டா கழுத அறிவிருக்கா?"
"ஏழு கழுதை வயசாயிடுச்சு இதுகூடத் தெரியலயா?"
"போ போ கழுதை கெட்டா குட்டிச்சுவர்"...
இப்படிப் பல விதங்களில்....

இப்படிப்பட்ட நம்ம கழுதையாரால் மனிதர்களுக்கு பல பெருமைகளும் உண்டு இங்கல்ல அதுவும் கூட ஒருசில நாடுகளில்,
அதிக கழுதைகளை வைத்திருப்போர் அந்த நாட்களில் மிகுந்த செல்வமுடையவர்களாகப் பார்க்கப் பட்டனர்....

இன்றைக்கு சுமாராக ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து மனிதனுக்காக மனித சமுதாய வளர்ச்சியில் கழுதைகள் பெரும்பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. மனிதர்களைச் சார்ந்து வாழும்(symbiotic)  தன்மைகொண்ட கழுதைகள், நாய்களப்போன்ற  அறிவுக்கூர்மையையும்,  எஜமானரிடம் அதிக விசுவாசத்தையும் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன....

கழுதைகள் மனிதனுக்கு பலகாலம் தொட்டு பலவிதத்தில் உதவியிருந்தாலும் குறிப்பாக உப்பளங்களிலும், உழவு வயல்வேலைகளிலும்,சலவைத் தொழிலிலும், மீனவர்கள் மீன்களையும் வலைகளையும் தூக்கிச் செல்லவும், விறகுகளை வெட்டிச் சுமக்கவும், மனிதர்களைச் சுமந்து செல்லவும் பொதி கழுதைகளின் பயன்பாடு உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவை....

மனிதச்சமூகங்களில் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக ஒருகாலத்தில்  கணிக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம் குறிப்பாக சீதனம் வழங்குவதில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும் இருந்தது...

நானறிந்தவகையில் சபரிமலை உட்பட பல கோவில்களில் கட்டுமானப் பணிகளில் உதவியதை (அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில்) நானே பார்த்திருக்கிறேன் இன்று டிராக்டர்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை சபரிமலைக்கு எடுத்துச்சென்று சூழல்பாதிப்பை ஏற்படுத்துவதையும்  காணலாம்....

ஆனால் கழுதைகளின் பலம் எப்படியென்றால் மிக சகிப்புத்தன்மையோடு பொதி சுமப்பது மட்டுமல்ல,கழுதைகள் தமக்குள்ளே ஒன்றிற்கொன்று தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள மிகையொலிகளைப் பயன்படுத்துகின்றன. கழுதை கத்துவதன் மூலம் (bray) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும், பலமான தொண்டையமைப்பும், சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்றன என்றால் அதன் சக்தியை பாருங்கள்....

நம்ம ஊரில் கழுதைகள் மீதான பார்வை வேறுவிதமாக இருந்தாலும் எகிப்தில் குடும்ப ஆட்சி முறைகளில் (dynasty 4) கிமு 2675 க்கும் கி.மு 2565 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை சொந்தமாக வைத்திருப்பவர்களே சமூகத்தில் பெரும் செல்வந்தராக பார்க்கப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் , அரசர் ஹோர் அஹா (King Narmer or King Hor-Aha) அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுழியில் 10 கழுதைகளும், மனிதர்களுக்கு வழங்கப்படும் மிகுந்த மரியாதை வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தது என்பது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதுதானே....

வரலாறு முழுமையும் இப்படிப் பல பெருமைகளுடைய கழுதைகள்மேலான மனிதர்களின் எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருந்திருக்கிறது. கழுதை என்ற பதத்தைப் பயன்படுத்தி மனிதர்களைக் தாழ்மைப்படுத்துவதற்கான பழமொழிகளுக்கும் நம் சமூகத்தில் கொஞ்சநஞ்சமில்லை...


அப்புறம் இந்த ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவையே கோவேறு கழுதைகள் அவை குதிரைபோல் கனைக்கும் கழுதைபோல் நன்கு பொதியும் சுமக்கும். எம்மையும் ஒரு பதிநான்கு கிமீ கள் இமயமலையில் கேதார்நாத் மலைமீது சுமந்து சென்று திரும்ப கொண்டுவந்து விட்டிருக்கின்றன அது இப்போது இருக்குமா எனத் தெரியாது அவைகளுக்கு இங்கு எமது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக அதன் படங்களையும் இணைத்திருக்கிறேன்....



எப்படியிருப்பினும் எமது சம காலத்தவர்கள் இது பேப்பரையும், சினிமா போஸ்டரை தின்று வாழ்ந்ததையும்,கழுதையிடம் சிலர் உதைபட்டவரையும் ,கடிபட்டவரையும்,பாட்டுப் பாடுபவர்களை கழுதை கத்துவதோடு ஒப்பிடுவதையும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்....

யாருக்காவது கழுதைகளுடனான அனுபம் இருப்பின் பகிரவும்.இந்த வெண்மைக் கழுதை படங்கள் அனைத்தும் ஒரு மழைநாளில் மேற்கு தொடர்ச்சி மலையில் மசினங்குடியில் cafe coffee day வில் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அந்த அழகான வெண்மைக் கழுதைக்கும் நன்றி....

பி.கு: எங்கள் பகுதியில் கழுதையின் விட்டையை (shit)எடுத்துவந்து குழந்தைகளுக்கு சாம்பிராணி தூபம் போடுவதுபோல் காட்டுவார்கள் அதனால் என்ன பயன் எனத் தெரியவில்லை. கழுதை விட்டையை ஊர்சுற்றி எனக் குறிப்பிடுவார்கள்....

சூழலியல் ஆவலுடன்...
Ramamurthi Ram

நமது முகநூலில் இன்னும் அதிக தகவலோடு
https://m.facebook.com/story.php?story_fbid=1154551567994210&id=100003181323647

Tuesday, 2 May 2017

கொண்டலாத்தி


இது கொண்டலாத்தி
hoopoe(Upupa epops)

தமிழில் இதற்கு பல பெயர்கள் உண்டு...
பல பகுதிகளில் வாழும் மக்கள் பல பெயர்களை ஒரே பறவைக்கு வைத்துக் குறிப்பிடுகிறார்கள் அந்த வகையில் இதற்கும்,
கொண்டலாத்தி...
சாவல்குருவி...
புளுக்கொத்தி...
எழுத்தாணிக் குருவி...
கொண்டைவளர்த்தி...
கொண்டை உலர்த்தி...
விசிறிக்கொண்டைக்குருவி...
இதில்லாமல் எங்கள் ஊரில் ஒரு வயதான ஆயா இதை சுடுகாடுதூத்தி(தூற்றி) என்றுதான் சொல்லும் அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.வேறு பெயர்கள் இருக்கிறதா எனச் சொல்லுங்கள்...


சில பகுதிகளில் மட்டுமல்ல பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் கூட இதை "மரங்கொத்தி"-என குறிப்பிடுகிறார்கள்.ஆனால் இது மரங்கொத்தி இல்லை.
அவர்கள் மரங்கொத்தியை இதுவரை கவனிக்காமல் இருந்தது கூட இதற்கு மரங்கொத்தி எனப்பெயரிட்டு அழைப்பது காரணமாக இருக்கலாம்...

வேண்டுமன்றால் மண்கொத்தி எனலாம் காரணம் இது மரங்கொத்திபோல் டொக் டொக் என மரத்தைக்கொத்தாமல் தரையில் மண்ணைக்கொத்தி கிளரி புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.ஒருவேளை இதன் நீண்ட வளைந்த அலகைப்பார்த்து மரங்கொத்திஎன எண்ணியிருக்கலாம்...

சேவலைப்போன்ற கொண்டயின்காரணமாக இதை சாவல் குருவி எனவும் கொண்டயே இதன்முக்கிய அடையாளமானதால் கொண்டலாத்தி எனப் பெயரும் நீண்ட எழுத்தாணி(எழுத்தாணி தெரியுமல்லவா திருவள்ளுவர் கையில் இருப்பது) போன்ற அலகினால் எழுத்தாணிக்குருவி எனவழங்குவது கூட மிகப் பொருத்தமான பெயர்கள்...

இதன் வாழிட எல்லைக்காகவும் இணையை அழைக்கவும் இது, ஹூப்பாப்பாப்...
ஹூப்பாப்பாப்...
எனச் சத்தமிடும்.இந்த ஒலியுன் காரணமாக ஆங்கிலத்தில் இதற்கு ஹூப்போ எனப் பெயர் வந்திருக்கலாம்...

உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும் பறக்கத்துவங்கும்போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை(crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும்.அதனால் இதை விசிறிக்கொண்டை குருவி என்கின்றனர்...

எமது சிறிய வயதில் எங்க  கிராமத்தில் ஓட்டுவீட்டின் சுவற்றிற்கும் ஓட்டிற்கும் இடையில் பலவீடுகளில் கூட்டை அமைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன் சிறிய துவாரத்தில்கூட நுழைந்துவிடும்.ஓட்டைப்பிரித்து கூட்டைப்பார்க்கப் போன நான் நாற்றம்தாங்காமல் அப்படியே அதேபோல கூட்டை மூடிவிட்டுவந்த அனுபவமும் உண்டு.கூடு பழையதுணி,புல்,இறகுகளுடன் விரும்பத்தகாத நாற்றத்துடன் இருக்கும்.நாற்றத்துற்கு காரணம் உள்ளே இருக்கும் பொருட்களும் பாதுகாப்பிற்காக பெண்குருவியின் கழுத்துப்பகுதியில் சுரக்கும் வஸ்துவும்தான் காரணம்...

ஓட்டுவீடு குறைந்த இந்நாளில் வேறுவாழிடங்களைத் தேடிக்கொள்கிறது.
ஆனால் மரங்கொத்திகள்(woodpecker) பொதுவாக மனிதக்குடியிருப்புகளின் அருகில் மனிதர்களை நெருங்கிவாழும் தன்மையுடையதல்ல...

தமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொள்ளும் இந்தக் கொண்டலாத்தி, மற்ற எதிரி பறவைகள் கூடு இருக்கும் பகுதிக்கு வந்தால் கூச்சலிட்டு தமதுகூரிய அலகால் கோபமாக கொத்திவிரட்டும்...

சமீபத்தில்ஒருநாள் அழகாக புழுதிமண்ணில் ஒருஇணை குளியல் நடத்திக்கொண்டிருந்தைப் பார்த்தேன்.அடிக்கடி புழுதி மண்ணில் மண்குளியல் நடத்தும். தரையில் அது அசைந்து நடப்பது ரசிக்கக் கூடிய அழகு....

பாலைவனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை அரபு நாடுகளில் கதைகளில் இவற்றிற்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு.இஸ்ரேல் நாட்டின் தேசியப்பறவைகூட இந்தக் கொண்டலாத்திதான்.தமிழ் இலக்கியங்களில்கூட இதை பதிவு செய்திருக்கிறார்கள்..

அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்...

சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram
நமது  முகநூல் பகுதியிலும் இவற்றைக் காணலாம்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Thursday, 27 April 2017

மறுநடவு மரங்கள்

மரங்களின் இடமாற்றம் மரங்களிற்கு தடுமாற்றமா ?



சமீபகாலமாக மிக அதிக அளவில் இயற்கை ஆர்வலர்களால் பல ஆண்டுகள் வளர்ந்த முதிய மரங்களை மறுநடவு செய்யப்படுகிறது.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தயவு செய்து மரங்களைப் பற்றி அறிந்த வல்லுனர்களும்,அனுபவசாலிகளும்,மரங்களின்மீது ஆர்வமுடையவர்களும் கருத்துகளை சொல்லவும்.இதுபற்றிய எமது பார்வைகூட தவறாக இருக்கலாம்.ஆகவே இந்தப் பதிவினைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதுபற்றிய கருத்தினைக் கூறினால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு உங்கள் கருத்து தொடக்கப்புள்ளியாக்கூட அமையலாம்...



எனக்குத் தெரிந்த அளவில், கடந்த ஆண்டில் இந்தியாவில் நமது தமிழ்நாட்டில் குன்னத்தூர் கோபி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான முப்பத்தி மூன்று புளிய மரங்களை இந்த மாதிரி மறுநடவு செய்யவதை பார்த்தேன்...



இப்படி ஊடகங்களால் பாராட்டியும் வியத்தும், இந்தமாதிரி மாற்றிடத்தில் மரங்களை பிடிங்கிநட்ட செயல்கள் கோவையிலும் அதைத்தொடர்ந்து பல இடங்களிலும் நடந்த இந்த செயல்,இரண்டு நாட்களுக்கு முன்னர் அவினாசியில் எமது நண்பர்களால் ஒரு அரசமரம் இடம்மாற்றி நட்டசெயல்.,எம்மை இப்போது பதிவிடத் தூண்டியது...



மரங்களின் மீதான பார்வையில் ஒரு விழிப்புணர்வும் எதிகாலத்தில் மரங்களின் தேவைகுறித்த அக்கறையும் இதில் தெரிவதைப்பார்த்து மிகமகிழ்ச்சியடைத்தாலும்,ஒருசிலவற்றையும் மனசினுள் சிந்திக்க வைக்கிறது...



இப்படி வயதான மரங்களை நடுவதென்பது..,
அதிக முயற்சி...
அதிக வேலைப்பளு...
அதிக செலவு...
அதிக பராமரிப்பு...
அதோடு மரம் துளிர்க்காவிட்டால் வீண்முயற்சியாக கூட ஆகிவிடும்...

ஆனால் இதுபோன்ற முயற்சியில் பாதிக்கும் குறைவான செலவில் அதிக அளவிலான மரங்களை உருவாக்கிடலாம்...
அதுவும் நன்கு வளர்ந்த ஆறடி செடிகளை நட்டு சிறிதுகாலம் பராமரித்தாலேபோதும் இதைவிட அதிக அளவில் மரங்களை உற்பத்தி செய்யலாம்...

அதுவுமில்லாமல்  வயது முதிர்ந்த மரங்கள் எவ்வளவுகாலம் இந்த மண்ணில் நிலைத்துநிற்கும் என சொல்ல முடியாது.அதே நேரத்தில் சில மரவகைகளின் போத்துகளை நடுவதன் மூலம் விரைவாக மரங்களை உருவாக்கிட முடியும்.ஒரே மரத்தின் நீண்ட கிளைகளால் சில மரங்களை உருவாக்கிடலாம்...

மரங்கள் சாலை விரிவாக்கத்தின்போதும்,மின்பாதைகள் அமைக்கும்போதுமே அதிக அளவில் வெட்டப்படுகின்றன அரசாங்கம் இதை மனதில் கொண்டு சாலைகளை மரங்களை வெட்டாமல்கூட மாற்றி அமைக்கலாம்.சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் முனைப்புக் காட்டும் அரசு.இருக்கிற மரங்களை வெட்டாமலும் பிடுங்காமலும் இருக்க புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கலாம்.மிச்சமிருப்பவைகளையாவது இனி தக்க வைக்கலாம்.ஆனால் அரசாங்கமே இந்த மரமழிக்கும் வேலைகளை செய்யாமலிருக்க வேண்டும்...



முன்பல்லாம் மக்களுக்குத்தான் இதுபற்றி அக்கறை இருக்காது.ஆனால் இப்போது மக்களுக்கு அக்கறை அதிகமாகிவிட்டது.அதன் விளைவுதான் மக்களே உழைப்பையும் பணத்தையும் செலவுசெய்து குளங்களையும் நீர்வழிப்பாதைகளையும் சீரமைப்பதோடு,இதுமாதிரி மரங்களை மாற்றிடத்தில் நடும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். நாட்டைச் சீரமைக டாஸ்மாக் கடைகளை அடித்துநொறுக்கி சீரமைப்பதையும் பார்த்து வருகிறோம்.அரசு செயல்படாதபோது மக்கள் செயல்படுவது மிகப்பெரிய மாற்றம்....



புதியநம்பிக்கை எட்டிப்பார்க்கிறது...
அக்கறையுடன்.,
Ramamurthi Ram

மரங்களை இடமாற்றி நடுவதுபற்றிய பலரது கருத்துப் பரிமாற்றங்களை எமது முகநூல்பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1269510503164982&id=100003181323647

Friday, 21 April 2017

பூமிதினம்(Earth day)2017

ஏப்ரல் 22
பூமிதினம்(Earth day)2017



எதற்காக இந்த தினமெல்லாம் ?...
இது கொண்டாட்ட தினமா ?
இல்லை....
"எச்சரிக்கை"தினம்...
இயல்பான பூமியாக இருந்தால் இதுமாதிரி எந்த தினத்தையும் அனுசரிக்கத்தேவையில்லை.,
இந்தபூமிப்பந்தின் இயல்புநிலையை மாற்றி எச்சரிக்கை கோட்டையும்(deadline)தாண்டவைத்துவிட்டோம் என்பதனை எச்சரிக்கவே இதுமாதிரி தினங்களை யாரோ  ஒருசிலர் ஒன்றுகூடி பயத்தால் உருவாக்கப்பட்டவைகள்தான் இதுமாதிரி தினங்கள். இதில் என்ன கொடுமை என்றால் இந்த பூமியில் வாழுகிற மனிதர்களில் அதிகமானவர்களுக்கு இன்னும் இந்தமாதிரி எச்சரிக்கைகள் போய்ச் சேரவேயில்லை என்பதுதான்...

அப்படி என்னதான் இந்த பூமிக்கு நடந்துவிட்டது அதற்கு நான் என்னசெய்வது இதுதானே பலரின்கேள்வி!!!...

சுத்தமான காத்து காணாமல்போய் காத்தெல்லாம்
மாசு...
மாசு...
மாசு...

பூமியிலுள்ள நீரெல்லாம் குடிக்கவே லாயக்கில்லாத நீராக மாறியதோட எங்க ஊருப்பக்கம் ரெண்டாயிரம் அடிக்கு கீழேதான் ஈரமண்ணையே பார்க்கமுடியுது...
உண்கிற உணவும்,நீரும்,
நஞ்சு...
நஞ்சு...
நஞ்சு...

எங்கும் பூத்துக்குலுங்கிய பசும்போர்வை போர்த்தியிருந்த பூமியெங்கும் ஒரே
குப்பை...
குப்பை...
குப்பை...
-இன்றைக்கு இந்தக் குப்பைகளுக்கு பல பெயர்கள் குப்பகளில் பலவகைகள் எங்களுக்குத் தெரிந்த குப்பையெல்லாம் ஆடு மாடுகளின் கழிவுகள்தான்...,
ஆனால் இன்றக்கோ ஒழிக்கவே முடியாத எலக்ட்ரானிக் குப்பைகள்,
பிளாஸ்டிக் குப்பைகள்,
ரசாயனக்குப்பைகள்,
மருத்துவக் குப்பைகள்...
அனல்மின் குப்பைகள்...
அணுக்கழிவுகள்...
-இதுவெல்லாம் என்ன ? இதுவெல்லாம் யாரால் ?
இதுவெல்லாம் எதனால் ?...

இந்தபூமி மிகச்சிலரின் சொகுசுக்காகவும் திருப்திக்காகவும் தினம்தோறும் ஒவ்வொருநொடியும் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது இதை சிதைப்பவர்களில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத அறியாத மனிதர்கள்தான் அதிகம்...

ஒவ்வொரு நிமிடமும் இந்த பூமிமுழுவதும் ஐம்பத்தாறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறதாம்.இதில் எங்க ஊர்ல தனியார் நிலங்களில் உள்ளூர் மரவெட்டியால் வெட்டுகிற மரமும்..,
வளர்ச்சீங்கற பேர்ல ரோடுபோட்றேன் ஊரை விரிவாக்குறேன்,தொழிற்சாலை கட்றேன்ட்டு வெட்டுற மரமெல்லாம் கணக்குல வருமான்னு தெரியல...

பூமியச் சுற்றியுள்ள தாவரக் கவசத்தையும்,ஓசோனையும் ஓட்டையப்போட்டதால பூமி நாளுக்கு நாள்
வெப்பம்....
வெப்பம்...
வெப்பம்...
-இப்படியே போனா  அடுத்துவரும் நாட்களில் நாம் எங்குபோய் நிற்போம்?...
அனேகமா இந்த பூமியே தந்தூரி அடுப்புமாதிரி ஆகிவிடும் இப்பவே அந்தமாதிரிதான் இருக்கிறது...
அதோடு.,
குடிக்கநீரும்,
மூச்சுவிட காற்றும்
உண்ண நல்ல உணவும் இல்லாமலேயே போய்விடும்.அதோடு இனி,
பருவத்தில் மழை இருக்காது
அல்லது மிகுதியான பெருமழைபெய்யும்...
தொடர்ந்த நீண்ட வறட்சிநிலை உருவாகலாம்....
விளைநிலங்கள் பாலைநிலமாகலாம்...
இனி என்ன செய்யப் போகிறோம்?

மனிதன்உழைப்பில்லாமல் என்றைக்கு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தானோ அன்று துவங்கியது இந்த சூழல்சிதைவு.ஆக இதன் வரலாற்றை ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை...

மனிதர்களைத் தவிர எந்த உயிரினமும் இயற்கையை சிதைத்துவாழவில்லை...
மனிதர்கள்கூட உணவிற்காக சிதைக்கவில்லை,
சொகுசான,
வசதியான வாழ்க்கைக்கும்,
மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் எனக்காட்டிக்கொள்ள இயற்கையை சிதைத்து பொருளைக்குவித்து,மிகத் தாழ்ந்தவனாகிவிட்டான்....

சூரியனைச்சுற்றிவருகிற கோள்களிலேயே உயிர்வாழக்கூடிய சூழல் உடைய சிறப்பான கோள்தான் இந்த பூமி.., இனி இந்த உயிர்ச்சூழல் உடைய பூமியில் இதற்குமேலும் நாமும் நமது சந்ததியினரும் வாழவேண்டும் என்கிற சுயநலத்தினை மனதில் கொண்டாவது முறையாக வாழப்பழகுவோம்...

*மரங்களை வெட்டுவதை நிறுத்தி வணிக நோக்கில்லாத மரங்களை இந்த பூமியெங்கும் நடுவோம்...
*பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சள்பையை கையிலெடுப்போம்...
*முடிந்தவரை சைக்கிளை ஓட்டுவோம் முடியாவிட்டால் பொதுப் போக்குவரத்தையாவது பயன்படுத்துவோம்...
*உயிர்வாழத் தேவையானதை மட்டும் வாங்குவோம் தேவையற்றதை வாங்கும் நுகர்வு மனப்பான்மையை புதைப்போம்...
*வணிகநோக்கில் இயற்கையை அழித்து  காசாக்குவதை தடுப்போம்...

-தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமை வாழ்க்கை வாழ்ந்தாலே வருங்கால சந்ததியினரும் மூச்சுவிட வாய்ப்பாய் அமையும் இல்லையென்றால் இந்தபூமி தம்மை எப்படியாவது சமன்படுத்திக்கொள்ளும். உருவத்தில் மிகப்பெரிய டைனோசர்களையே காணாமல்போகச் செய்த இந்த பூமிக்கு மனிதர்களை சரிசெய்ய வெகுநேரம் ஆகாது...

இந்த புவிநாளில் அதை உணர்ந்து வாழ்வோம்.இனிவரும் எல்லா நாட்களையும் புவிநாளாகவே அனுசரித்து வாழ்வோம்...
சூழலியல் அக்கறையுடன்:
Ramamurthi Ram
முகநூல் பக்கத்திற்கு:
https://www.facebook.com/ramamurthi.ram.52



Monday, 17 April 2017

ஆந்தைகளுக்கு (Owls) நன்றி செலுத்துவோம்...

ஆந்தைகளுக்கு (Owls)
நன்றி செலுத்துவோம்...

(உருவம் என்றும் நிலையில்லாதது.,செய்கிற செயல்தான் என்றும் இந்த பூமிஉள்ளவரை நிலைக்கும்)

"கோட்டான் கத்தினா சாவு நடக்கும்"- அதுவும் எந்தவீட்டிற்கு அருகிலிருந்து அலறுகிறதோ அந்த வீட்டு வயசானவங்க பாடையில ஏத்தற அளவில  கிராமத்துல பேசுவாங்க.,அதனாலேயே இதற்கு "சாவுக்குருவி" ன்னு இன்னொரு பேரு.,
எங்கவீட்டுக்கு அருகில் கத்தும்போது எமக்கு சாவுபயம் எட்டிப்பார்க்கும்பாருங்க. அத நெனச்சா இப்ப சிரிப்பாவருது...



"ஏண்டா கூகையாட்ட முழிச்சிட்டிருக்கிறே ?"- இது ஒரு வசவுச்சொல்....
இந்தமாதிரி இந்த உலகம் பூராவுமே பல நாடுகளில் ஆந்தைமீது ஒரு பீதியக் கிளப்பும் அறிவாளி மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.அதற்கு அதன் செயல்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம்...

மனிதர்களைப் போன்றே தட்டையான முகத்தில் இமைக்காத கண்கள்மூலம் நீண்ட நேரம் தீவிரமாக உத்ற்றுப் பார்க்கும் தன்மை.உடலைத்திருப்பாமல் பின்பக்கமுள்ளவற்றையும் தலையை மட்டும் முழுவதும் திருகி(திருப்பி)ப்பார்க்கும் அமைப்பு(270டிகிரி கோணம்வரை)இரவில் மட்டும் நடமாட்டம். நிசப்தமான இரவில் இடைவிடாத அலறல் இதுவெல்லாம் அரவமற்ற சூழலில் வாழ்ந்த அந்தக்கால மனிதர்களுக்கு இனம்புரியாத அச்சத்தையும் ஆந்தைகளின்மீது வெறுப்பையும் உண்டாக்கியிருக்கலாம்.காரணமே இல்லாமல் ஆந்தையை எங்கு கண்டாலும், மனிதர்களை கொல்லவருபவனை அடித்துக்கொல்லும் ரேஞ்சில், கூட்டமாக வெறியோடு கொல்வதை நேரில் பார்த்திருக்கிறேன்....

உயிர்ச்சூழலை சமன்படுத்த இயற்கை ஒவ்வொரு உயிர்களையும் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தட்பவெப்ப புவியமைப்பிற்கேற்ப ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி வலுவான காரணத்திற்காக, இந்த பூமியில் மனிதர்களுக்கு முன்னரே உருவானதுதான. இந்த ஆந்தைகள் ஆக மனிதனுக்கு முன்னரே உருவானதால் ஆந்தைகள் மனிதர்களைக் கொள்ள படைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...

ஆந்தை அலறுவது அதன் இணையை ஈர்த்து குடும்பம்நடத்ததானே தவிர மனிதர்களின் மரண அறிவிப்பிற்கில்லை.இங்கு இப்படியிருக்க வட நாட்டில் ஒருசில பகுதிகளில், ஆந்தையை மகாலட்சுமியின் வாகனமாகவும்.,அது எந்தவீட்டில் அமர்ந்து அலறுகிறதோ அந்த வீட்டிற்கு நல்ல செய்தியை சொல்லவந்த தூதுவனாகவும் மதிக்கிறார்கள்.சில நாடுகளில் இதை ஒரு அறிவிற்கானகுறியீடாக வைத்திருக்கிறார்கள்.அதனால் பல பலகளைக்கழக சின்னங்களில் ஆந்தை இடம்பெற்றிருக்கிறது.கிரேக்க தேவதை அதீனாவின் சின்னம் ஆந்தை. அந்த நாட்டுத் தபால் தலைகளிலும், பழைய நாணயங்களிலும் ஆந்தையை வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்...

வடமாநிலங்களில் பலபகுதிகளில் ஏவல்,பில்லி,சூனியம் போன்ற அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மந்திரதந்திர வேலைகளில் ஆந்தைகளை பலியிட்டும் ஒவ்வொரு செயலுக்கும் ஆந்தைகளின் ஒவ்வொரு உடல்பாகத்தைப் பயன்படுத்தும் ஏமாற்றுப்பேர்வழிகளும் அவற்றை நம்பி பணத்தையிழக்கும் எளியமனிதர்கள் மட்டுமல்ல பெரிய அரசியல் பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை....

இந்தமாதிரி செயல்களுக்கு வடமாநில கிராமங்களில் பதினைந்திற்கு மேலான வகைகளை பிடித்து ஆந்தைவியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.ஒரு ஆந்தை அதன் வகையைப் பொறுத்து ரூபாய் ஐந்தாயிரத்திற்கு மேல் விற்கப்படுகிறது...

1972 ம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆந்தைவேட்டையும் வியாபாரமும் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் வடிந்தி கிராமங்களில் இதை தடுப்பது சிரமம் தான் அவர்கள் புலி,சிறுத்தைகளைக்கூட அடித்துக்கொள்ள அஞ்சுவதில்லையே....

உண்மையில் ஆந்தை நமக்கு நண்பன் எப்படித் தெரியுமா?...
வயல்களிலும் உணவுக் கிடங்குகளிலும் உணவுப் பொருட்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது
எலிகள். எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10 சதவிகிதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் அளவு வயலிலும், 33 மெட்ரிக் டன் அளவு சேமிப்பு கிடங்குகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
எலி ஒரு ஆண்டில் ஐந்து ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும்
சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகளைப்போட்டுத் தள்ளுகிறது...

ஒரு ஜோடி எலிகள் அதன் ஆயுற்காலத்தில சுமாராக 500 முதல் 2000 வரையாக உருவாகுமாம். இப்படி
அளவுக்கு அதிகமாக பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது
அவற்றைத்தின்னும் ஆந்தைகளும் பாம்புகளும் தான். எலிகளின் எண்ணிக்கை
கட்டுப்பாடற்று பெருகும். எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிப்பதோடல்லாமல்  ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ்
இவற்றையம் பரப்புகிறது.இப்போது புரிகிறதா ஆந்தையை ஏன் இயற்கை உருவாக்கியதென்று?

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுக்கிறது என்று தெரியுமா ? அப்படியே ஒரு முழு எலி. ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிலிருந்து இரண்டு எலிகளைத்
தின்னும் அதேசமயம் ஒருஆந்தையானது ஒரு இரவில் நான்கு எலிகளுக்குமேல் தின்னும்.ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம்.எலியும் இரவில் நடமாடக்கூடியது...

தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.ஆனால் அருகிலிப்பதைப் பார்க்க சிரமப்படுமாம்.

ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன...

அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.

ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.

ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.
அதற்கேற்றபடி அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத்
தெரியும்.

பெரியவகைகளில் நான்கரை கிலோ எடைவரை இருக்கும்.
ஆந்தைகளின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை. அதனால் அவை
பறக்கும் போது சத்தமே உண்டாகாது. அதனால் இரைஉயிரிகளை ஆந்தை நெருங்கும் வரை இரையால் உணரமுடியாது!..

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை பிடித்துத் தின்னும்...
சூழலியல் தேடலுடன்:
Ramamurthi Ram

இவ்வளவு நன்மைகளை இந்த மனிதர்களுக்கு செய்யும்
ஆந்தைகளை போற்றி அவற்றின் வாழிடங்களை சிதைக்காமல் பாதுகாக்கனுமா ? இல்லையா???
சொல்லுங்கள்.....

இதேபோன்ற சூழலியல் சார்ந்த பதிவுகளை எமதுமுகநூலில்காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...