Saturday, 12 August 2017

காடுகளின் நண்பன் நமக்கேன் நண்பனில்லை?




//மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும்  நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டில் நிறைவு செய்து முடித்திருக்கிறோம்.

சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா?///

உலக யானைகள் தின சிறப்புக் கட்டுரை..

மேலும் படிக்க: https://goo.gl/rrsoxf

Wednesday, 9 August 2017

புத்தகங்கள்

தேடிச்சென்றவையும்  எதிரில் வந்தவையும்....



சில புத்தகங்களைத் தேடித்தேடிச் சென்றேன்.சில புத்தகங்கள் எதேச்சையாக கண்ணில் பட்டன.என்ன கொடுமையென்றால் சில சூழலியல் புத்தகங்களும் பயணக் கட்டுரைகளும் பதிப்பாகி பத்துப் பதுனைந்து வருடங்களுக்குப் பிறகும் விற்காமல் இருந்தவற்றை நான் வாங்கியியிருக்கிறேன்.புள்ளிவிவரப்படி புத்தகங்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக திருப்பூர் புத்தக கண்காட்சியில் அருமைமிகு  கோவை சதாசிவம் எம்மிடம் சொன்னார்.ஆனால் சூழலியல் குறித்த புத்தகங்கள் அந்த அளவிற்கு விற்கிறதா எனத் தெரியவில்லை.....

இதில் நக்கீரன் நக்கீரன் அவர்களின் காடோடி மட்டும் ஐந்தாவது முறையாக நான் வாங்கியிருக்கிறேன்.அதை நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக.அதை ஏற்கனவே மூன்றுமுறை படித்துவிட்டேன்.எமக்குள் பல மாற்றங்களை உண்டாக்கிய புத்தகம்.ஏன் உங்களுக்கும் கூட அது நிகழலாம்...

ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு மூன்றுமுறை சென்றாகிவிட்டது.பல்லாயிரம் நல்ல புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றது.நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் எதில் சென்று பத்தகங்களை வாங்குவது என நீங்கள் எம்மிடம் கேட்டால்.அவசியமாக பூவுலகின் நண்பர்கள்(நண்பர் Yoga Raj இருக்கிறார்),காலச்சுவடு,பாரதி புத்தகாலயம் ஸ்டால்களுக்கு சென்று வாருங்கள்....

ஒரே வருத்தம் நண்பர் Satheesh Muthu Gopal அவர்களின் "யாருக்கானது பூமி" -(கணையாழி பதிப்பகம்)இங்கும் கிடைக்கவில்லை. இனி ஆன்லைனில்தான் முயற்சிக்கவேண்டும் அல்லது அவராவது இறக்கப்பட்டு எமக்கு அனுப்பினாலும் பரவாயில்லை....

படியுங்கள் நிறையப் படியுங்கள் புத்தகங்களே என்னை நூறுசதவிகிதம் மாற்றியிருக்கிறது.எமது படிப்பு பழக்கம் தினத்தந்தியின் கன்னித்தீவில் துவங்கி அன்றைய அம்புலிமாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ்,ராணிமுத்து,குங்குமச்சிமிழில் ஆரம்பித்து பிரபஞ்சன்,சாண்டில்யன்,பாலகுமாரன் ஆகியோரை கடந்து இன்று வேறு வேறு பரிணாமங்களில் கொண்டு சென்றிருக்கிறது....

அன்றைய ஓவியர்களான கோபுலு,மாருதி,ராமு,ம.செ,ஜெ... போன்றவர்களையும் மறக்கமுடியவில்லை....

மீண்டும் சொல்கிறேன் பாடத்திட்டங்களில் உள்ள பாடத்தைப் படித்து தேர்ச்சியடைந்தால் மட்டும் அறிவென்பது கிடைத்துவிடாது.எம்மைப்பொருத்தவரை மிக்சர் சுற்றிக்கொடுத்த பேப்பர்கள் கூட நமக்குள் மாற்றத்தை உண்டாக்கிவிடும்.மிக்சர்பொட்டலங்கள்கூட நமக்கு ஆசானால் ஆச்சரியமில்லை....

ஆகவே அறிவென்பது நமக்கு எங்கும் கிடைக்கலாம்.அது இந்த புத்தகத் திருவிழாவில்கூட கிட்டும்.முயற்சியுங்கள்...

என்றென்றும் தேடலுடன் உங்கள்,
Ramamurthi Ram

Thursday, 3 August 2017

ஆலமரம்

ஆலமரம்
Banyan tree (Ficus bengalensis)



"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி..."
-இந்த வார்த்தைகளை கேட்காத தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்...
ஆலமரம் போல் எந்த சூழ்நிலையிலும் துளிர்விட்டுத்தழைக்கும் மரத்தைப் பார்க்க முடியாது.எங்கு விழுந்தாலும் முளைப்பதற்கு மயற்சிக்கும். குறிப்பாக பறவைகளின் எச்சங்கள் மூலம் முளைக்கும் செடிகளுக்கு அபாரமாக வளரும் தன்மையுண்டு.பராமரிப்பற்ற சுவர்கள்,பாறை இடுக்குகள்,மரங்களின் இடுக்குகள்.என முளைப்பதற்கு தோதான எந்த இடங்களையும் கடுகினைவிடச் சிறிய அளவுடைய ஆலம் விதைகள் விட்டு வைப்பதில்லை....



இந்த நாட்டோடும்,மண்னோடும்,மனிதர்களோடும் நீண்ட தொடர்புள்ளது ஆலமரம்.பாலுள்ள மரங்கள் மீது பற்றும்,மரியாதையும் வைத்திருந்த இந்த மண்ணின் மக்கள்,ஆலமரத்தோடு வைத்திருந்த உறவோ சாதாரணமில்லை....
ஆதிகாலம்  தொட்டே ஆலமரத்தடி திண்ணைகள் இருந்திருக்கின்றன.வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்லவும் கிராமக் கூட்டங்கள் நடக்குமிடமாகவும்,வியாபாரம் நடக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.வணக்கத்திற்குரிய மரமாகவும் இருந்திருக்கிறது. பல சங்கப் பாடல்களிலும் இடம்பெற்று வெட்டினால் பாவம்-தீங்கு உண்டாகும் என்ற அளவில் நம்பிக்கை இருந்திருக்கிறது.இன்றைக்குப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.மக்கள் வாழும் பகுதிகளிலும்,விவசாய நிலங்களிலும் அதிக அளவில் இருந்திருக்கின்றன்.அக்காலத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளையும், உணவுத்தேவைக்கான சிறிய விவசாய நிலப்பகுதிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால், அத்தனை நிலங்களுமே வனக்காடுகளாகத்தான் இருந்திருக்கிறது. அதில் ஆலமரங்கள் பெருத்த எண்ணிக்கையிலேயே இருந்திருக்கிறது....



ஒரு ஆலமரத்தில் சிறியதும் பெரியதுமான பலவகைப் பறவைகள்,பூச்சிகள்,பல்லிகள்,அணில்கள்,எறும்புகள் போன்ற பல்லுயிர்களும் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.பல பறவைகளுக்கு விருப்பமான உணவு ஆலம்பழம்...



அலெக்சாண்டர் தமது படைகளோடு இத்தியாவினுள் நுழைந்த போது வியந்து ஆச்சரியப்பட்டு பார்த்தது ஆலமரத்தைத்தான்.நான்காயிரம் முதல் ஏழாயிரம் படைவீரர்கள் ஆலமரத்தின் கீழே தங்கியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பரந்த மரங்கள் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இன்றைக்கும் நானூற்றி ஐம்பது வருட பழமையான அடையாறு ஆலமரம் பல கதைகளைச் சொல்லும் சாட்சியாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல்,
ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம்,
உலகப் புகழ்பெற்ற கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம்,
குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன.பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில் ஆலமரம் கூட ஆச்சரியமான அளவுதான். ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரே சமயத்தில் மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை இந்தமரங்களின் கீழ்உள்ள நிழலில் தங்கலாம்....



ஆலம் விழுதுகள் பல மருத்துவ குணம் கொண்டது அதன் துவர்ப்புச் சுவையே பல்,ஈறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்பவையாக இருக்கிறது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-இது காலகாலமாக தமிழ்பேசும் மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கும் வெகு சாதாரண பழமொழி.ஆலமரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ பயனுடையது என்பதை மறுப்பதற்கில்லை.அதிலும் குறிப்பாக ஆலம் விழுதின் தண்டில் பல் துலக்கினால்,பல் மற்றும் ஈறுகள் தொடர்பான அத்தனை பிரச்சனைகளும. எளிதில் தீரும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை என்பதைவிட,அதுதான் உண்மை என அடித்துச் சொல்லலாம்.நான் நீண்ட நாட்கள் ஆலம் விழுதிலும்,கருவேலங்குச்சியிலும் பல் துலக்கியவன்....



ஒரு மொழியில் ஒரு பெருளிற்கு பல பெயர்கள் இருத்தல் என்பது,அது அந்த மொழிபேசும் மக்களோடு நீண்ட நெடுங்கால பிணைப்பில் உள்ளது என்பதை எளிதில் அறியலாம் அந்த வகையில் இந்த மரத்திற்கு,
இயக்கு,
ரோதம்,
காமரம்,
சோளி,
தோல்மரம்,
பாமரம்,
பூதம்,
வடம்,
பானோக்கி....
இன்னும் எத்தனை பெயர்களோ?!!!...
இப்படி பல பெயர்களில் அழைத்தாலும் ஆலமரம் எனப் பெயர் வந்ததற்கு காரணம் மிக அகலமான பரப்பளவில் வளருவதால் இதற்கு "அகல்மரம்"-என்ற பெயரே நீண்ட காலம் இருந்தது.பின்னர் காலப்போக்கில் இப்பெயரே மருவி ஆலமரம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது....



ஆலமரங்கள் நீண்டகாலம் நிலைத்துநிற்க விழுதுகள் முக்கிய காரணம்.கிளைகளிலிருந்து கீழே இறங்கும் விழுதுகள் விலங்குகளினாலோ அல்லது மனிதர்களாலோ இடையூறு இல்லாமல் இருந்தால் மண்ணில் ஊன்றி உறுதியாகி கிளைகளைத் தாங்கி,தாய்மரத்தின் சுமையைக்குறைப்பதோடு மரம் பரந்து விரிவடையவும் உதவுகிறது.நான் பார்த்த மரங்களில் குறிப்பாக கர்நாடகாவில் சில ஆலமரங்கள் விழுதுகள் இல்லாமலேயே இருந்தன (அதற்கான காரணத்தை அனுபவசாலிகள் யாராவது விவரித்தால் உதவியாக இருக்கும்)அதே சமயத்தில் நம்மூரைவிட மிகப் பருத்த மரங்களையும் பார்க்க முடிந்தது.ஆலமரகுடும்பத்தின் வேறு இனங்களாகவும் இருக்கலாம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் அங்கும் அந்த அழகான மரங்கள் சிதைந்து நின்ற காட்சிகள் மனதை இன்னும் வருத்திக்கொண்டே இருக்கிறது....



கரூர் பக்கத்தில் உள்ள நெரூரில் கோட்டைமேடு என்ற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் அதில் எக்கச்சக்க பாலித்தீன் பைகளும் சில வைக்கோளில் செய்த குடுவைகளையும் கட்டப்பட்டிருந்தன்.அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அதனுள் மாடுகள் கன்றை ஈன்றபின் வெளித்தள்ளும் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து ஆலமரம் போன்ற பால்மரங்களில் கட்டிவிடுவார்களாம்.அப்படிக் கட்டினால் அதிகளவில் பால்சுரக்கும் என்கிற நம்பிக்கையாம்.நம்பிக்கை இருக்கட்டும் அதற்காக பாலிதீன் பைகளிலா கட்டுவதா ? அது காய்ந்துவிடாமல் நாற்றமெடுத்து,ஈக்கள் மொய்த்து சுகாதாரகேடும்,சூழல் கேடுமல்லவா நடக்கிறது. வைக்கோலை பயன்படுத்தினால் பிரச்சனை வராதே.....



ஆலமர அனுபவங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு தகவல்கள் இருக்கிறது. இங்கு இப்போதைக்கு இது போதும்.அதிக வெப்பம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆலமரம் போன்ற அதிக நிழல்தந்துஅதிக ஆக்ஸிஜன் தரும் மரங்களே இன்றைக்கு தேவை என்பதை உணர்ந்து பாதுகாப்போம்.பயன்பெறுவோம்...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
விரிவான தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1363912550391443&id=100003181323647

Wednesday, 26 July 2017

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்
(12நவம்பர்1896-27ஜூலை1987 )



"மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்."
  -சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி நூலில்

தமது பெயரை சாலிம் அலி என அழைப்பதையே விரும்பினார்.ஆனால் பலர் இன்னும் சலீம் அலி என்றே சொல்லியும்,எழுதியும். வருகிறார்கள்.....

இந்தியாவின் பறவை மனிதர்.பறவைகளைப்பற்றிய அரிய பதிவுகளை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியவரும்,இன்றைய நமது சமகால பறவை ஆர்வலர்கள் பலரின் முதல் முன்னோடி என்பதையும் எத்தனைபேர் தெரிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை....

அவருடைய பறவைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தேடல்கள் மற்றும் ஆவணப் படுத்தும் காலகட்டம் என்பது மிக சிரமமான,சவாலானகாலம்.
காரணம் அன்றைய கால கட்டத்தில் பறவைகளை இனங்கண்டு ஆவணப்படுத்த இன்றைய காலம்போல் சிறப்பான எளிமையான கருவிகள்- குறிப்பாக புகைப்படக் கருவிகள்,தொலைநோக்கி கருவிகள் எளிதில் கிடைக்காத காலம் என்பதைவிட,இருந்தவற்றில்கூட இன்றைய எளிமையான நவீன மாற்றங்கள் அவற்றில் இல்லை....

ஆவணப்படுத்த எளிய இரண்டேவழிகள்தான் அப்போது உண்டு(!)...
ஒன்று ஆவணப்படுத்தவேண்டிய  பறவையை கொன்று பதப்படுத்துவது,பிரிதொன்று அந்தப் பறவைகளை படங்களாக வரைவது....

இன்றும் இப்படி சவாலான காலமாக இருந்தால் எத்தனை பறவை ஆர்வலர்கள் இன்றைக்கு நம்மிடையே உருவாகி இருப்பார்கள் என சற்று யோசிக்கவேண்டிய நிலைதான்.குறிப்பாக பறவைகளை படம்பிடிப்பவர்களை கண்டுபிடிக்கவே முடியாது....

அதுமட்டுமில்லாமல் அன்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான பாதைகளும் இல்லை,வாகனங்களும் இந்தளவு இல்லை,குறிப்பாக தொலை பேசிகளோ,மொபைல் போன்களோ இல்லை என்பது சவாலான காலம்தானே!....

1941ம் ஆண்டு Book of Indian Birds என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளுக்குமேல் கடந்துவிட்டது.
இந்த நூல் இந்தியாவில் எழுதப்பட்ட முதல் பறவைகள் வழிகாட்டிப் புத்தகமாகும். சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இன்றைக்கும் உலகம்முழுவதும் பிரபலமாக இருக்கும், இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார்...

தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவர் எழுதியுமிருக்கிறார்.கிட்டத்தட்ட சுமார் இருபதாண்டுகாலம் காட்டிற்குள் பறவை தேடுதலுக்காகவே நேரத்தை செலவிட்டிருக்கிறார்.இப்போதும்கூட பறவை ஆர்வலர்களை பயித்தியங்கள் போல பார்க்கும் மனநிலையில்தான் பலர் இருக்கும் நிலையில் அந்தக் காலகட்டத்தில் அவரை எப்படியெல்லாம் பார்த்து பேசியிருக்கும்!!!.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமது பத்தாவது வயதில் ஒரு பறவையை  வேட்டையாடி, அதன்பின் அதன்மீது ஆவலாகி,தேடுதலை துவங்கி பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் ஆரம்பித்து, பல வெளிநாடுகள்வரை சென்று தேடித்தேடி கற்ற சாலிம் அலி. பல பறவைகள்பற்றிய ஆராய்ச்சிக்கு பல பொக்கிசங்களை இந்த பூமிக்கு கொடுத்திருக்கிறார்....

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில்(BNHS)கற்க ஆரம்பித்த சாலிம் அலி பின்னர் அதன் தலைவராகவே ஆனவர்...

தீவிரமாக வேட்டையாடும் காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே,பல பறவைகள் மற்றும் உயிரியல் காப்பகங்கள், சரணாலயங்கள் உருவாக காரணமாக இருந்த இவரிற்கு,எண்ணற்ற விருதுகளும் கௌரவங்களும் வந்து சேர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை.அதிலும் குறிப்பாக,இந்திய அரசின் பத்மபூஷன் விருதும் 1958, பத்ம விபூஷன் விருதும் 1976 இவரது பறவையியல் சேவைக்காக தேடிவந்தது.
நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். மேலும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது...



தமது வாழ்வில் சுமார் அறுபத்தியைந்து ஆண்டுகாலம் பறவைகளையும்,உயிரினங்களையும் ஆராய்ந்த, அந்த மகத்தான பறவைமனிதரான சாலிம் அலியின் நினைவுநாள்தான் இன்று.நன்றியுடன் நினைவுகூறுவோம்....

நன்றியுடன்,
Ramamurthi Ram

Saturday, 8 July 2017

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்.



நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பவானிசாகர் அணைக்கட்டில் இருபதடி உயரத்திற்கு சேரும் சகதியும் நிரம்பியிருக்கிறது. மிக அதிகமாக நீர்வரத்து இருக்கும் போது அந்த இருபதடி நீரை தேக்கிவைக் முடிவதில்லை,ஆனால் இன்றைக்கு சுமாராக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர்,இப்போது இருப்பதைப்போல் எந்தவிதமான நவீன சக்திவாய்ந்த எந்திரங்களும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில்,அணை தன்னைத்தானே தூர்வாரும் நுட்பத்தை நமது முன்னோர்கள் கொடிவேரி அணைக்கடில் செய்திருக்கிறார்கள்.என்பது மிக வியப்பான ஒன்று அந்த அறிவும் தொழில்நுட்பமும் வளராமல் இன்றைக்கு ஏன் தேய்ந்தது என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்!!!...



நீர் மேலாண்மையில் நம்ம ஆட்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை எனச் சொல்லலாம். மனித ஆற்றலைக்கொண்டே,மணல்போக்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீர் குவிகின்ற மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் இருபதடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்திற்குள் கற்களால் ஆன நுட்பமான சல்லடை போன்ற அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு, மணலும்,சகதியும் அணையினுள் தேங்கி விடாதவாறு உருவாக்கி,இந்த மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது...
இந்த மணல்போக்கிகளின் வேலை என்னவென்றால் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து அணைக்கு வெளிப்பக்கமாக சுரங்கத்தின் துவாரம் வழியாக வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனிச்சிறப்பான தொழில்நுட்பம். இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்திருக்கிறது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் சிறப்பான நுட்பம் மிகுந்த கட்டுமான அமைப்பு இது....
சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், முழுக்க முழுக்க மனித ஆற்றலைக்கொண்டே,சற்று தொலைவிலுள்ள கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து கற்களைக்கொண்டுவந்து  மிகத்தெளிவாக உறுதியாக கட்டி முடித்திருக்கும் திறமையை எப்படித்தான் வியப்பது !!!...



நேர்த்தியான நீர்மேலாண்மையை கையாண்டு ஆற்றின் போக்கிலேயே அணக்கு வடக்குப்பக்கம் அரக்கன்கோட்டை கால்வாயும்,தென்புறம் தடப்பள்ளி கால்வயையும் அமைத்து பாசனத்தில் எஞ்சிய கழிவுநீர் மீண்டும் வடிந்து ஆற்றிற்கே வருகின்ற வகையில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்...
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிப்போர்களின் சொர்க்க பூமியாக மாறியிருக்கிறது.கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்தியிருகிறார்கள். காலி பாட்டில்களை அணைக்குள் எறிந்திருக்கிறார்கள்.கொஞ்சநாட்களுக்கு முன்பெல்லாம் தீவிரமாக நடந்தது இதுவெல்லாம்.இப்போதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.அப்போது குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு மூடியே விட்டார்கள்...
அருமையான தொழில்நுட்பத்தை மண்ணைப்போட்டு மூடி இன்றைக்கு மணலும் சகதியும் சேர்ந்து மேடாகி அணைக்குள் பெரும்பாலான இடத்தை செடிகள் ஆக்கிரமித்திருக்கிறது.குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத்திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்!
இது எங்கே இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு,பல சினிமாப் படங்களில் பார்த்திருக்கலாம்.ஈரோடு-கோபிச்செட்டிபாளையத்திலிருத்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் இந்தக் கொடிவேரி அணை அமைந்திருக்கிறது. திருப்பூரிலிருத்து வருபவர்கள் பெருமாநல்லூர்,நம்பியூர்,குருமந்தூர் வழியாக கொடிவேரியை அடையலாம்...



விடுமுறை நாட்களில் ஒருநாளை இங்கு சுகமான குளியலுடன் கழிக்கலாம்.இந்தமாதிரி சுற்றுலா இடங்களுக்கேயுண்டான ஆயில் மசாஜ் மற்றும் அங்குள்ள மக்களால் ஆற்றின் ஓரமாக நடத்தப்படும் தற்காலிக மீன்வறுவல், சாப்பாட்டுக்கடைகள் போன்றவையும் உண்டு.ஆசைதீரக்குளித்துவிட்டு பூங்காவில் குழந்தைகளுடன் நாளைக்கழித்துவிட்டு வரலாம்.தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை,கவர்களை எடுத்துச்செல்ல வேண்டாம்....

சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram

இன்னும் இதுபற்றிய அதிக தகவல்கள் மற்றும் கருத்துக்களை காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 4 July 2017

விலங்குகளுக்கு அபாயம்

"விலங்குகளுக்கு அபாயம்"



மின்கம்பங்களில்
DANGER
அபாயம்
ప్రమాదం
खतरा
അപായം
ભય
ಅಪಾಯ....
இப்படி சிவப்பு எச்சரிக்கை பலகைகளை பார்த்திருப்போம்.

இங்குள்ள மனிதர்களில் பாதிப்பேரிற்குக் கூட இதைப் படித்து புரிந்து கொள்ள முடியாது.....

இதில் விலங்குகளின் நிலைதான் ஆகக் கொடுமை. அதற்கு எந்த எல்லையுமே இல்லாததால்,
அதற்கு ரோடு எது..,
விவசாயக் காடு எது..,
மின்கம்பம் எது..,
வேகமாக போகும் ரயிலோ..,
வாகனங்களையோ....
பிரித்து அறிகின்ற அறிவா இருக்கும்!...

மனிதர்களின் அபாய அறிவிப்புகளை அறிந்துகொள்ளுமளவு புத்திசாலியானவையா விலங்குகள்?...
அவைதான் நம்மைப்போல் படிக்கவில்லையே?!...

அவைகளை காக்கவேண்டுமென வாய்கிழிய கத்தும் அரசுகளின் திட்டம் ஆனால் அதை செயல்படுத்தும் அரசு இயந்திரங்களை இயக்கும் மனிதர்கள் அந்த அளவிற்கு சிந்திப்பதில்லை சிந்திக்குமளவிற்கு அவர்களும் இல்லை.அவர்களோ
அத்தியை வெட்டு..,
ஆளைவெட்டு...
என அறிவோடு பேசுகிறார்கள்...



இப்படியிருக்க நேற்று உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி உயிரை விட்டிருக்கிறது ஒரு சிறுத்தை.🐆🐆🐆 இந்தக்கொடுமை தெலுங்கானா வின் ஹைதராபாத்-நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாரம் வனப்பகுதிக்கு அருகில் நடந்திருக்கிறது...

இவ்வளவு பெரிய சிறுத்தை எப்படி இந்த மின்கம்பத்தில் ஏறும் என கிராம மக்கள் கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை அடித்த இரையை தூக்கிக்கொண்டு நன்றாக மரங்களில் ஏறும் சிறுத்தையால்.எதுவுமில்லாமல் மின்கம்பத்தின் மேலே ஏறுவது பெரிய விசயமில்லை.ஏற்கனவே கடந்த ஆண்டு குஜராத்தில் மயிலைத் துரத்திச்சென்ற சிறுத்தை மின்சார டிரானஸ்பார்மரில் ஏறி, எரிந்து உயிரை விட்டது உலகிற்கே தெரியும்.நமது பதிவிலும் இருக்கிறது...



இது போன்ற பல இடங்களில் பலமுறை பறவைகள்,கரடிகள்🐨🐒🐘🦍🦉🦅 உட்பட பல விலங்குகள் இறந்திருக்கின்றன.கடந்தவாரத்தில் மிகத்துயமான வகையில் கர்நாடக குடகு பகுதியில் வனத்தையொட்டிய காபித் தோட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஆறு யானைகளைப் பலி கொடுத்தோம்....



இப்படி எஞ்சியிருக்கிற குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்குகளை காப்பதற்காவது ,குறைந்தபட்ச திட்டமாக, விலங்குகள் நடமாடும் பகுதிகளிலாவது பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.விலங்குகளை பாதுகாக்க ஒதுக்கப்படும் பலகோடி ரூபாய்கள் என்னவாகின்றனவோ?!...

கேட்டால் ஆளாளாலிற்கு வேறுவேறு துறைகளை மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.நடக்கிற துயர சம்பவத்திற்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்கிற நிலையிலேயே விலகி நின்றுவிடுகிறார்கள்.இவர்கள் இப்படியிருக்க ஒன்இந்தியா வீடியோவைப் பாருங்கள் சிறுத்தைக்குப்(Leopard) பதிலாக இந்தியாவிலேயே இல்லாத சிவிங்கிப்புலியின்(cheetah)படத்தைப் போட்டு காமெடி பன்னுகிறான்.இதுபோன்ற ஊடகங்களுக்கு எப்போதுதான் பொறுப்பு வருமோ.இது எல்லாமே அறிவுப் பஞ்சத்தின் விளைவு...

ஒரு முடிவெடுத்து மனிதக்கவனக் குறைவால் நடக்கும் இதுபோன்ற இழப்புகளையாவது தவிர்க்கலாம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

மேலும் அதிக விபரங்கள் மற்றும் கருத்துகளுக்கு எமது முகநூல்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Monday, 3 July 2017

கும்பகோணம்

"கும்பகோணம்"

எமது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சம்பவங்களை துவக்கிவைத்த ஊர்.எனது ஊர் கோவைப்பகுதியாக இருந்தாலும் கும்பகோணத்திற்கும் எமக்கும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது எமது நண்பன் "காட்டூர் ராஜா" வினுடனான,இருபத்தியெட்டு ஆண்டுகால நெருங்கிய நட்புதான்



இது சாதாரண உறவல்ல, இருவர்குடும்பத்திற்குமான நெருங்கிய உறவு அது, என்பதில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமையும். சுகதுக்கங்கள் அனைத்திலும் இரு குடும்பமுமே பங்கெடுத்துக் கொள்வோம்.அப்படி ஒரு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டு,உடனடியாக ஊர்திரும்பலாம் என்று இருக்கும்போது,இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம் அப்படியே பிச்சாவரம் அலையாத்திக் காடுகளை பார்க்கலாம் என திடீர் முடிவுசெய்து குடந்தையிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்துவிட்டு, இரவு தங்கலுக்கு சிதம்பரம் சென்றுவிட்டோம்.நான் சிதம்பரம் சென்றதை பலரிற்கு முகநூல்வழியாக மார்க் காட்டிக்கொடுத்துவிட்டார்.உடனடியாக பசுமை ஹாஜியிடமிருந்து மெசேஞ்சரில் தகவல் அது அப்படியே உங்களுக்கு...



"சார் சிதம்பரம் அருகே சற்று முன் வந்து சென்றீர்களா  ?"

கொஞ்சம் தாமதமாக எமதுபதில்...
"வணக்கம் அய்யா நான் தற்போது சிதம்பரத்தில்தான் இருக்கிறேன்...  :) "

"சிதம்பரத்திலிருந்து 17 Km. தான் எனது ஊர்.
போன் காண்பித்தது நீங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக!
சிதம்பரத்தில் எங்கு தங்கியுள்ளீர்கள்  ,?
உங்களின் மொபைல் நம்பர் Pls...
....நான் சிதம்பரத்தில் இருந்து இப்பொழுதுதான் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊர் வந்தேன்"...
-இது பசுமை ஹாஜி.

இதற்குப்பிறகு எங்கள் உரையாடல் போன்மூலம் தொடர்ந்து அவருடைய அன்பையும் அழைப்பையும் தவிர்க்கவே முடியாமல்,அடுத்தநாள் மதியம் பிச்சாவரத்திலிருந்து பரங்கிப்பேட்டை சென்று....







எமது வாழ்வில் மறக்கமுடியாத நாளாக ஆக்கிவிட்டார். அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எவ்வளவு அன்பான அக்கறையான குடும்பம் என சிறிது நேரத்தில் உணர்த்திவிட்டார்கள்.நேரில் அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கா? அதுவும் மதிய உணவிற்கா ?.... வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து,
முடிந்தவரை அவர்வீட்டிற்குச் செல்வதை தவிர்த்துவிட்டு அவரைமட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்றிருந்த எம்மையும் குறிப்பாக எமது மனைவி மகளையும் வழுக்கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்...

போகாதிருந்திருந்தால் வாழ்வில் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்த வாய்ப்பை இழந்திருப்போம்....
சரி போகிறோம் உடனடியாக கிளம்புகிறோம் என்றிருந்த எங்களது முடிவை அவர்களது அருமையான விருந்தும் பேச்சும் மாலைவரை அங்கேயே இருக்கச்செய்துவிட்டது.....

ஊரெங்கும் மரங்கள் குறிப்பாக பாதியளவு புங்கன் மரங்கள் மீதியுள்ளவை மற்ற நாட்டுமரங்களை காண முடிந்தது.வெறும் பேச்சு வெட்டிவேலை என உணர்ந்த ஹாஜி மாற்றம் தன்னிடமிருந்தே துவங்கவேண்டும் என முதலில் தமது வீட்டிற்கு அருகே மரங்களை நட ஆரம்பித்து,வீதியெங்கும் அந்த நற்காரியம் தொடர்ந்து பிறகு பக்கத்து தெருக்கள் என ஊரே இயங்கி இப்போது முழுவதுமாக மரங்கள்....
மரங்கள்...

வீடெங்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கான இரும்பு கூண்டுகளும்,கம்பிவலைகளும் இருப்பதைக் காண முடிந்தது.குடும்பத்தையும் குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தைகளையும் மரங்களின் காதலர்களாக,காவலர்களாக மாற்றி வைத்திருக்கிறார்...

இப்போது பக்கத்து ஊர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு சற்று தொலைவிலுள்ள ஊர்களிலும் இளைஞர்களை திரட்டி அங்கும் மரங்களின் அவசியம்பற்றி எடுத்துரைத்து மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல் அதை பராமரிப்பதையும் வலியுறுத்தி கற்றுத்தருகிறது இவர்கள் குழு.இந்த நற்செயல்களுக்கு காரணமாக இருந்த முன்னோடிகளையும் இப்போது களத்தில் உதவிவருபவர்களையும் மறக்காமல் குறிப்பிட்ட ஹாஜி தன்னால் மட்டும் அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது, எமக்கு மிக மிக தன்னடக்கமாகவே பட்டது.....

பிறகு பேச்சு காடுகள்,விலங்குகள்,பறவைகள் அவற்றால் காடுவளர்ப்பு- பெருக்கம் என எங்கள் அனுபவங்களையும் மாறி மாறி பகிர்ந்துகொண்டு,புறப்பட மனமில்லாமலே புறப்பட்டோம் காரணம்,எங்களுக்குள் பேச இன்னும் நிறைய விசயங்கள் இருப்பதாகவே பட்டது.பேச்சு முற்றுப்பெறாமலேயே பரங்கிப்பேட்டையிலிருந்து எங்கள் பயணம் கோவையை நோக்கி பறப்படத் தயாரானது....

அவர் கொடுத்த பரங்கிப்பேட்டை ஹல்வா சுவை இன்றும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.அதன் பெருமைகளையும் அவர் சொல்லத் தவறவில்லை...

இங்கும் #தாளிப்பனை:



சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

இந்தப் பயணத்தை நல்ல அனுபவமாக்கிய சகோதரர்  பசுமை ஹாஜி அவர்களுக்கும்,முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அன்பை வருத்தமாக வெளிப்படுத்திய தம்பி Stepan Edbark க்கும்.விழுப்பரம் அங்கிருந்து பக்கம் தான் வந்துவிட்டுச் செல்லுங்கள்.என அன்புக் கட்டளையிட்ட சகோதரர் Swaminathan Sellasundaram க்கும், நன்றிகளையும் அன்பையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்...

என்றும் சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
மேலும் இதுபற்றிய தகவல்கள்,கருத்துகளைக் காண,
https://m.facebook.com/story.php?story_fbid=1332210333561665&id=100003181323647

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...