Monday, 6 November 2017

சத்தியமங்கலம் காடுகளில் வனச்சுற்றுலா

மகிழ்ச்சி மிக மகிழ்ச்சி...
(கொஞ்சம் வருத்தம்)


அறிவிப்பு வந்தவுடனேயே மிக சந்தோசமாக இருந்தது. அறிவிப்பு வந்துகூட கொஞ்ச நாட்களாக அதை நடைமுறைப் படுத்தும் காலம் நீண்டு கொண்டே இருந்தது. அதை நம்புவதா இல்லை வேண்டாமா ? என்றுகூட மனதிற்குள்ளே ஒரு கேள்வி விடாமல் ஓடிக்கொண்டே வந்தது. இதன்மூலம் தான் அது நடக்கிறது என வாட்ஸாப்பில் இரண்டைக் காட்டினார்கள்.அப்போதுகூட கொஞ்சம் அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் நேற்றைய முன்தினம் பத்திரிக்கைகளில் செய்தியை அச்சில் பார்க்கும்போது இறுதியாக,உறுதியாக நம்ப வேண்டியதாகிவிட்டது.....

அந்த இரண்டும் அருமையான safari van தாங்க...
அப்புறமாக வேறொன்றும் இல்லீங்க நம்ம சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட wildlife safari தாங்க அளவற்ற மகிழ்ச்சிக்கு காரணம்...

இப்போதைக்கு இது முன்னோட்டமாக பரீட்சார்த்த முறையில் அதுவும் கிட்டத்தட்ட ஏழு இடத்தில்!!!!...
நடைபெறுவதாக சொன்ன அறிவிப்பு கொஞ்சம் குழப்பினாலும் போய்பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலில் நேற்றைய இரவு முழுவதும் தூங்கவே இல்லை.போவதா இல்லை வேண்டாமா என்கிற மன நிலையிலேயே இருந்தோம் இரவு பதினொன்றை மணிக்கு போவதாக முடிவெடுத்ததால் பல ஆர்வலர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லவே முடியவில்லை :D

இன்று காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி,இடையில் ஒரு  டீயும் ஒரு காபியும் குடித்து சத்தி வன அலுவலகத்தை 6.35 சென்றடைந்தோம்.அதற்கு முன்னரே திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த நமது அறிவார்ந்த,அன்பான நமக்குப் பிடித்தமான 12 பேர் தயாராக திருப்பூரிலிருந்து வந்தது ஆச்சரியமில்லை.அவர்கள் வந்த நேரமும் வேகமும்  அவர்களின் வழக்கமான அர்ப்பணிப்பை உணர்த்தியது...

ஒரு வழியாக 7 மணியளவில் கிளம்பி சத்தியமங்கலம் வனப்பகுதியை நோக்கி தீவிர ஆவலுடன் சென்றோம் இன்றைக்கு முதல் நாள் என்பதால் எங்களுடன் Ranger மற்றும் Forester ம் இரண்டு Gaurd களும் APW களும் வந்தனர்.மிக மிக அக்கறையோடு சிறப்பாக கவனித்துக்கொண்டனர்.முதல் நாள் இதுவும் முதல் Trip என்பதால் நாங்கள் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இருப்பதை உணர்ந்தோம்....

ஆனாலும் சில தீவிர பிரச்சனைகளை சொல்லாவிட்டால் நான் பொறுப்பற்றவனாவேன்.முதலாவது நாங்கள் சென்ற வாகனம் நாம் எதிர்பார்த்த அந்த புதிய காட்டுலா வாகனங்களில்  இரண்டில் ஒன்றுகூட இது இல்லை!!!...

நாங்கள் சென்றது திருப்பூரிற்கு தொழிலாளர்களை அழத்துச்செல்லும்  ஒரு சாதாரண வாகனம். இரண்டாவது திட்டமிட்ட அளவிற்கு பெரிய முன்னேற்பாடுகள் இல்லை இதில் முக்கியமானது பாதை.நேற்றுப் பெய்த மழையில் ஒரே சகதியும் சேறும்.பல மாநிலங்களில் வன உலா சென்ற நமக்கு,நமது சொந்த மண்ணில் நடக்கும் நிகழ்வை பெரிய எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது குறைவில்லாத ஏமாற்றத்தையே கொடுத்தது ...

இதில் வன ஊழியர்களையோ அல்லது வனத்துறையினையோ அதுகாரிகளையோ குறை சொல்ல ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது நமது வனத்துறை இதற்கு நமது பெருமைமிகு அரசே காரணம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல ?...

பல இடங்களைக் கடக்க வெகு தாமதமானது. எல்லாமே கிட்டத்தட்ட ஒரு சடங்கு நிகழ்வாகவே நடந்தேறியது.ஆனாலும் ஏற்கனவே நானும் எமதுமகளும் கடந்த மே மாதத்தில் யானைகள் கணக்கெடுப்பில் மூன்றுநாட்கள் சுற்றித்திரிந்தது இதே பகுதிதான்(ஆனால் அன்றைக்கு  இங்கே ஒருசிறு பல்லியைக்கூட பார்க்கவில்லை என்பதை வெளியில் எப்படிச்சொல்வது?...)

இன்றைக்கு இறுதியாக ஒரு நன்கு திடகாத்திரமாக வளர்ந்த ஒரு ஆண் கடமாவை(Indian Gaur) பார்த்து வியந்தோம்....

உண்மையாக சொல்லப்போனால் இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகமென்பது மிகப் பெரியது.நீங்கள் இதை முது மலையுடனோ அல்லது பந்திப்பூருடனோ ஒப்பிட்டே பார்க்க முடியாது இதன் பரப்பளவு 1411 சதுர கிலோமீட்டர். இது 2013ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடந்த நான்கு வருடங்களாக நடந்த ஆய்வின்படியே இந்த வனச்சுற்றுலாவை நடத்த முடிவெடுத்து இருக்கிறார்கள்....

ஆனாலும் சிறப்பொன்றும் இல்லை என்பது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், எங்கோயோ வெகு தொலைவில் நடந்த இது மாதிரி வனச்சுற்றுலா நிகழ்வுகள் எமது சொந்த மண்ணில் நடப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் என்பதில் அடங்காத உவகை.சற்று ஆறுதல் என்னவென்றால் இது Trial தான் விரைவில் ஒரு சரியான உருவத்திற்கு வரும்.இது பெரிய வனப்பகுதிதான் ஆனாலும் ஏழு இடங்களில் நடத்த வேண்டியதில்லை.இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டும் சிறப்பாக செய்தால்போதும்.மாற்றிக்கொள்ளாவிட்டால் பெரிய வெற்றி என்பது இருக்காது....

இது தொடர்பாக கேள்விகள் இருந்தால் கேளுங்கள் எமக்கு தெரிந்தது எதுவோ அதைச் சொல்கிறேன்.இது வீரப்பன் காடு.பல கற்பனை மற்றும் நிஜக் கதைகள் அடங்கிய மாபெரும் பொக்கிசம்...

*********************************
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ரசிக்கலாம் வாங்க! 'வண்ணப்பூரணி' வனச்சுற்றுலா திட்டம் தொடக்கம் -
https://goo.gl/EeE6d2 

Sunday, 17 September 2017

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு"

எத்தனை சட்டம் போட்டு தடுத்தாலும் கள்ளவேட்டை என்பதை தடுக்க முடிகிறதா ?...



இன்றைக்கும் பத்திரிக்கைகளில் கள்ளவேட்டை தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதர்கள் மட்டுமே இந்தபூமியில் வாழத் தகுதியானவர்களா ?
அப்படி மனிதர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்திடமுடியுமா ?
மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இந்த பூமியில் இவ்வளவு ஆதிக்க உரிமை ?
மனிதர்கள் அவ்வளவு உரிமை பெற்றவர்களா ?...



ஆதியில் மனித சமூகம் காடுகளில் தன்னிச்சையாக வாழ்ந்து திரியும்போது வேட்டையென்பது உணவிற்கான தேவையாக இருந்தது.ஓரிடத்தில் தங்க நேர்ந்தபோது நாகரீக வாசம் வந்து பிற தேவைகளான உடையையும் எரிபொருளையும் விலங்குகளின் தோலும் கொழுப்பும் தீர்த்தன...

ஆதியில் வேட்டை சமூகத்திலிருந்த  மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் பல லட்சக்கணக்கான ஆண்டு வாழ்க்கை ஓட்ட மாறுபாட்டில், கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு நிலையாக ஓரிடத்தில் வாழ ஆரம்பித்து தனக்கான உணவு,உடை,இருப்பிட போக்குவரத்துவசதிகளை கச்சிதமாக ஏற்படுத்திக்கொண்டாலும்.சமீபகாலம் வரை  பிற காட்டுயிர்களை வேட்டையாடுதலை நிறுத்தவே இல்லை.பல உயிரினவகைகளை உலகத்திலிருந்தே முற்றிலுமாக துடைத்து அழித்தபின்னரே சிலரிற்கு அந்த விசயம் குற்ற உணர்வை ஏற்படுத்தி பாதித்திருக்கிறது அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு உண்டாகி வனச்சட்டங்கள் பல நாடுகளில் தீவிரமாக நடைமுறைக்கு வந்தது....

இந்தியாவில் 1972 ம் ஆண்டு வனவிலங்கு சட்டம் அமுலுக்கு வரும்வரை வேட்டை என்பது உணவிற்காகாக என்பது சிதைந்து அது ஒரு ஹீரோயிசமாக வேட்டையாடுபவர்களால் நினைக்கப்பட்டது.ஆனால் இன்று காட்டுயிர்களை வேட்டையாடுவது மிகத் தண்டனைக்குரிய குற்றம்.சட்டந்தான் நம்மை மாற்றவேண்டுமானால் நாம் யார்?...

ஆக வேட்டையாடுதல் என்பது ஆரம்பத்தில் சரியே ஆனால் மனிதர்கள் வாழும் சூழலைமட்டுமே பெருக்கி,சுயநலமாக உலகம் முழுவதும் உள்ள காடுகளை சுருக்கி சுருக்கி குறைத்து காட்டுயிகள் வாழும் சூழலை குறுக்கிய நிலையில் எஞ்சியிருக்கும் காட்டுயிர்களை கண்ணி வைத்துபிடிப்பதும் கள்ளத் துப்பாக்கி கொண்டு கள்ளவேட்டையாடுவதும் கொஞ்சமாவது நியாயமா நீங்களே சொல்லுங்க...



இன்றும் கள்ளவேட்டை ஆங்காங்கு மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்தநிலையை மாற்ற சட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் அரசு அமைப்புகளுக்கு மட்டுமே பொறுப்பென்றால் நாமெல்லாம் பொறுப்பற்ற மனிதர்களே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்...

இப்போதைக்கு நாம்தான் இந்த உலகில் உருவான கடைசி உயிரினம் என்பதை நினைவில் கொள்வோம்.ஆகவே இதுபற்றி எதாவது அவசிமாக சொல்லவும் உறவுகளே,நண்பர்களே,அன்பானவர்களே ....

Monday, 11 September 2017

"யானைடாக்டர்"

"யானைடாக்டர்"
நண்பர்களுக்கு அறிமுகம் செய்த நம்ம டாக்டர்.



முன்னுதாரணமாக மாமனிதர்கள் இன்றும் இருப்பார்கள்.நம் கண்களுக்கு அவர்கள் தட்டுப்படுவதில்லை,அவ்வளவுதான்...
அவர்களில் ஒருவர் டாக்டர் கே.
...அவரின் வரலாற்றை அடுத்த தலைமுறையின் முன் கொண்டு சென்று நிறுத்துவதே இச்சிறுகதையின் நோக்கம். இது நாம் இங்கு என்னவாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.



-ஜெயமோகன்.
எழுத்தாளர்.

"டாக்டர்.பழனி"...
மேலே டாக்டர்.கே குறித்து,ஜெ சொன்ன வார்த்தைகள் நம்ம டாக்டருக்கும் பொருந்தும்.
நண்பர்களுக்கு எதையெதையோ அறிமுகப் படுத்துபவர்களுக்கு இடையே இந்த அருமையான நூலை உண்மைக்கதையை அனைவரும் அறியவேண்டும். ஏன் இந்த உலகமே அறியவேண்டும் என்பதில் பேராவல் கொண்டவர்.அதன் தொடக்கம் தம்மிடமிருந்தே துவங்கவேண்டும் எனபதன் தொடக்கமாக தமது சக டாக்டர்களுக்கும் நண்பர்களுக்கும் முதலில் இதை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த உண்மைக் கதையின் எழுத்தாளர் ஜெவிடம் அனுமதியும்,முன்னுரையும் பெற்று அடக்கவிலையில் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்...

டாக்டர் பழனி எமக்கு முகநூலின் மூலமே அறிமுகமானார்.தர்மபுரி மாவட்டம் அரூரில் மிருகவைத்தியம் பார்ப்பதோடு,பெட்ரோல் பங்க்கும் நடத்திவருகிறார்.பன்முகத்தன்மையை ஒருங்கே பெற்ற டாக்டருக்கு சூழலியல் மீதான ஆர்வம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மிகுந்த தேடுதல் கொண்டவரிடம் எம்மை அறிமுகம் செய்தவர் அவரது நண்பர் ஆசிரியர் தங்கமணி.முதலில் எமது முகநூல் பதிவுகளை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். பதிவுகளை பார்த்த டாக்டர் உடனடியாக எமது போன்நெம்பரைப் பெற்று பேச ஆரம்பித்தவர் இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறார்...

இது நடந்தது ஓராண்டிற்கு முன்னர். அப்போதே நாங்கள் சந்திக்கவேண்டும் என விரும்பினோம்.அருமையான இயற்கை சூழலில் சந்தித்தோம் அந்த சந்திப்பு பலரை எமக்கு அறிமுகம் செய்ததில்லாமல் பலவற்றை எமக்கு கற்றுத் தந்தது...

டாக்டர் உண்மையில் ஒரு புத்தகப் பிரியர்.
சூழல் செயல்பாட்டாளர்.
விளையாட்டு விரும்பி.
மருத்துவர்.
டாக்டர் ஃபியூல்ஸின் உரிமையாளர்.
அதற்கு மேலாக மிக அன்பான நண்பர் மனதில் பட்டதை குறிப்பாக பாராட்டத் தயங்காதவர்....

படித்தோமா..
தொழில் செய்தோமா...
நாலுகாசு பார்த்தோமா...
தாம்மட்டும் வாழ்ந்தோமா என்றிருக்கும் கூட்டத்திற்கு நடுவில் இந்த மாதிரி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும் பூமியின் மீது அக்கறையும் கொண்ட மனிதர்கள் மிக மிக குறைவே.தம்மைப்போலவே தமது மகன் மகேந்திர வர்மாவை உருவாக்கிக் கொண்டிருப்பது இன்னும் சிறப்பு...

டாக்டர் அனுப்பிய இரண்டு புத்தகமும் அதில்  அளவில்லாத பிரியமும் பார்சலாக வந்தது. டாக்டர் இரண்டு நாட்களாக பார்சல் கிடைத்ததா ? கிடைத்ததா ? என தொடர்த்து கேட்டுக்கொண்டே இருந்தார்.சனியன்றே வந்த பார்சல் இன்றுதான் கையில் கிடைத்தது.புத்தகம் ஏற்கனவே எம்மிடம் இருந்தாலும் இது இரண்டும் எமக்கு பொக்கிசம்....

புத்தகத்தை மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.தமிழிலும் அதை அப்படியே ஆங்கிலத்திலும் பதித்திருப்பது மிகச் சிறப்பு.கதையின் சுவராசியத்திற்காக எழுத்தில் சில நெருடல்கள் இருந்தாலும்.பிரமிப்பான நமது சமகாலத்தில் ஆனைமலைக் காடுகளில் பணியாற்றி வாழ்ந்து மறைந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யின் வரலாற்றுக்கதை என்பதே மிக மிக சிறப்பு.அனைவருக்கும் இது சென்று சேரவண்டும்.அட்டைப்படத்தில் அழகான நம்ம ஊர் யானையை போடாமல் ஆப்பிரிக்க யானை இடம்பெற்றது டாக்டரின் தவறில்லை அது இயல்வாகையின் தவறு என்பது எமக்கு முன்பே தெரியும்.அவர்களுக்கும் வெளிநாட்டு மோகமா ?... :D

யானையின்மீதும் காட்டின் மீதும் ஆர்வம் கொண்டவர்களும்.ஆர்வமில்லாதவர்களும்(பிறகு ஆர்வமாகிவிடும்)படிக்க பரிசளிக்க ஏற்ற நூல். நம்ம டாக்டரின் இதுபோன்ற சிறப்பான பணிகள் இந்த பூமிக்கு இன்னும் தேவை.தொடர வேண்டும்.
அனைவரும் டாக்டரை வாழ்த்துவோம்...

அதிக தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1397946163654748&id=10000323647

Wednesday, 6 September 2017

"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"

நம்மைச்சுற்றி பல எளிமையான உயர்ந்த மனிதர்கள்,நம்ம ஊரிலும் இந்த பூமியிலும் வாழ்ந்து சிறப்பான பணிகளை செய்துவருகிறார்கள்.அவர்களை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.நமது கோளாறான அளவுகோளின்படி உயர்ந்த மனிதர்கள் என்கிற அளவீடு வேறானதாக இருப்பதுதான் பெரிய குறையே....

நம்மையும் நமது நெருங்கிய உறவுகளையும் நிதானமாக கவனித்துப் புரிந்துகொள்ளாமல் ஓடும்போது,இவர்களை கவனிக்காமல் செல்வதில் ஆச்சரியமில்லை.அவ்வாறான மனிதர்களில் இன்றைக்கு மிக முக்கியமான ஒருவர்பற்றி பேசுவோம்....

அவர்,
"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"



பறவை ஆர்வலர்கள் அத்தனைபேருக்கும் பால்பாண்டியைத் தெரியும்...
பால்பாண்டியின் பாட்டையும் தெரியும்.எதைக்கேட்டாலும் நிறுத்தாமல் பேசும் பால்பாண்டி...
கேட்கும் சிலவற்றை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்...
பெரும்பாலான பிரபலங்களை தமக்குத் தெரியும் என்பவர்,அவர்களுக்கும் தம்மைத்தெரியும் எனும்போது உங்களின் மனதுக்குள். சந்தேகம் எட்டிப்பார்க்கும்...

இங்கிலாந்து இளவரசர் சார்லஸோடு முகமெல்லாம் சிரிப்பா பேசுகிற படத்தையும் பார்க்க முடிகிறது.கேரள முதல்வர் அச்சுதானந்தனோடு சமமாக ஒரேமேடையில் உட்கார்ந்திருக்கும் படத்தையும் காட்டுகிறார்.சோனியா காந்தியிடம் விருது வாங்குவதையும் காட்டுகிறார்...
இவரைப் பற்றி பல பத்திரிகை தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளையும் பார்க்கமுடிகிறது....

பறவைகளின் மீது உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?...
பறவைகளில் ஆண்பெண் வேறுபாடுகளை எப்படிக் கண்டறிவது?...
எந்தெந்தப் பறவைகள் இங்கேயே இருப்பவை?...
எந்தெந்தப் பறவைகள் வெளியிலிருந்து இங்கு வருபவை?....
ஒவ வொன்றும் எந்தப்பகுதி எந்த நாட்டிலிருந்து இங்கு வருகின்றன?...
வந்த பறவைகள் எல்லாமும் இங்கே கூடுகட்டுகிறதா ?
எந்த மாதத்தில் கூடுகட்டும்? கூட்டினை மென்மைப்படுத்த எதைக்கொண்டு கூடுகளை அமைக்கிறது ?
எல்லாக்கூடுகளும் ஒரே மாதிரியானவையா?
பறவைக்குப் பறவை கூடுகளின் வேறுபடுகள் என்ன?
மரத்திலும் தரையிலும் கூடுகளை அமைக்கும் பறவைகள் என்னென்ன ? இணைசேர்ந்த பிறகு முட்டையிட எத்தனை நாட்களாகும் ?...
ஒவ்வொரு பறவைகளின் முட்டைகளின் நிறங்கள் என்னென்ன?

அடைகாப்பது ஆணா பெண்ணா ?...
முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர எத்தனை நாட்களாகும்?...
வெளிவந்த குஞ்சு கண்விழிக்க எத்தனை நாட்களாகும்?
பறக்க எத்தனை நாட்களாகும்?... ரோமங்கள் என்ன நிறம்? குஞ்சுக்கு என்னமாதிரி உணவுகளை பெற்றோர்கள் ஊட்டும் ?...
-இப்படி எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் பதிலைக் கொட்டுகிற எளிய மனிதர் பால்பாண்டிக்குப்பிறகு இந்தப் பறவைகளை பாதுகாப்பதும்,களத்திலிருந்து தகவல்களை கடத்துவதும் யார் என்பது கேள்விக்குறியே.இப்போதிருக்கும் அவரது வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது  அடுத்தவாரிசாக யாரையாவது உருவாக்குங்கள் என நம்மால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை...

இப்படியான மனிதர்களை இருக்கும்போதே நாம் கொண்டாடுவோம்.அப்போதுதான் அரசும் கொஞ்சமாவது இவர்களை கவனிக்கும்.
இல்லையென்றால் வழக்கம்போல....

இவரைப்பற்றி சில வரிகளில் மட்டுமே சொல்ல முயல்வது என்பது முழுமையானதாக இருக்காது.சொல்வதற்கு நிறைய இருக்கிறது....
சொல்வோம்...

Saturday, 12 August 2017

காடுகளின் நண்பன் நமக்கேன் நண்பனில்லை?




//மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும்  நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டில் நிறைவு செய்து முடித்திருக்கிறோம்.

சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா?///

உலக யானைகள் தின சிறப்புக் கட்டுரை..

மேலும் படிக்க: https://goo.gl/rrsoxf

Wednesday, 9 August 2017

புத்தகங்கள்

தேடிச்சென்றவையும்  எதிரில் வந்தவையும்....



சில புத்தகங்களைத் தேடித்தேடிச் சென்றேன்.சில புத்தகங்கள் எதேச்சையாக கண்ணில் பட்டன.என்ன கொடுமையென்றால் சில சூழலியல் புத்தகங்களும் பயணக் கட்டுரைகளும் பதிப்பாகி பத்துப் பதுனைந்து வருடங்களுக்குப் பிறகும் விற்காமல் இருந்தவற்றை நான் வாங்கியியிருக்கிறேன்.புள்ளிவிவரப்படி புத்தகங்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக திருப்பூர் புத்தக கண்காட்சியில் அருமைமிகு  கோவை சதாசிவம் எம்மிடம் சொன்னார்.ஆனால் சூழலியல் குறித்த புத்தகங்கள் அந்த அளவிற்கு விற்கிறதா எனத் தெரியவில்லை.....

இதில் நக்கீரன் நக்கீரன் அவர்களின் காடோடி மட்டும் ஐந்தாவது முறையாக நான் வாங்கியிருக்கிறேன்.அதை நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக.அதை ஏற்கனவே மூன்றுமுறை படித்துவிட்டேன்.எமக்குள் பல மாற்றங்களை உண்டாக்கிய புத்தகம்.ஏன் உங்களுக்கும் கூட அது நிகழலாம்...

ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு மூன்றுமுறை சென்றாகிவிட்டது.பல்லாயிரம் நல்ல புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றது.நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் எதில் சென்று பத்தகங்களை வாங்குவது என நீங்கள் எம்மிடம் கேட்டால்.அவசியமாக பூவுலகின் நண்பர்கள்(நண்பர் Yoga Raj இருக்கிறார்),காலச்சுவடு,பாரதி புத்தகாலயம் ஸ்டால்களுக்கு சென்று வாருங்கள்....

ஒரே வருத்தம் நண்பர் Satheesh Muthu Gopal அவர்களின் "யாருக்கானது பூமி" -(கணையாழி பதிப்பகம்)இங்கும் கிடைக்கவில்லை. இனி ஆன்லைனில்தான் முயற்சிக்கவேண்டும் அல்லது அவராவது இறக்கப்பட்டு எமக்கு அனுப்பினாலும் பரவாயில்லை....

படியுங்கள் நிறையப் படியுங்கள் புத்தகங்களே என்னை நூறுசதவிகிதம் மாற்றியிருக்கிறது.எமது படிப்பு பழக்கம் தினத்தந்தியின் கன்னித்தீவில் துவங்கி அன்றைய அம்புலிமாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ்,ராணிமுத்து,குங்குமச்சிமிழில் ஆரம்பித்து பிரபஞ்சன்,சாண்டில்யன்,பாலகுமாரன் ஆகியோரை கடந்து இன்று வேறு வேறு பரிணாமங்களில் கொண்டு சென்றிருக்கிறது....

அன்றைய ஓவியர்களான கோபுலு,மாருதி,ராமு,ம.செ,ஜெ... போன்றவர்களையும் மறக்கமுடியவில்லை....

மீண்டும் சொல்கிறேன் பாடத்திட்டங்களில் உள்ள பாடத்தைப் படித்து தேர்ச்சியடைந்தால் மட்டும் அறிவென்பது கிடைத்துவிடாது.எம்மைப்பொருத்தவரை மிக்சர் சுற்றிக்கொடுத்த பேப்பர்கள் கூட நமக்குள் மாற்றத்தை உண்டாக்கிவிடும்.மிக்சர்பொட்டலங்கள்கூட நமக்கு ஆசானால் ஆச்சரியமில்லை....

ஆகவே அறிவென்பது நமக்கு எங்கும் கிடைக்கலாம்.அது இந்த புத்தகத் திருவிழாவில்கூட கிட்டும்.முயற்சியுங்கள்...

என்றென்றும் தேடலுடன் உங்கள்,
Ramamurthi Ram

Thursday, 3 August 2017

ஆலமரம்

ஆலமரம்
Banyan tree (Ficus bengalensis)



"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி..."
-இந்த வார்த்தைகளை கேட்காத தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்...
ஆலமரம் போல் எந்த சூழ்நிலையிலும் துளிர்விட்டுத்தழைக்கும் மரத்தைப் பார்க்க முடியாது.எங்கு விழுந்தாலும் முளைப்பதற்கு மயற்சிக்கும். குறிப்பாக பறவைகளின் எச்சங்கள் மூலம் முளைக்கும் செடிகளுக்கு அபாரமாக வளரும் தன்மையுண்டு.பராமரிப்பற்ற சுவர்கள்,பாறை இடுக்குகள்,மரங்களின் இடுக்குகள்.என முளைப்பதற்கு தோதான எந்த இடங்களையும் கடுகினைவிடச் சிறிய அளவுடைய ஆலம் விதைகள் விட்டு வைப்பதில்லை....



இந்த நாட்டோடும்,மண்னோடும்,மனிதர்களோடும் நீண்ட தொடர்புள்ளது ஆலமரம்.பாலுள்ள மரங்கள் மீது பற்றும்,மரியாதையும் வைத்திருந்த இந்த மண்ணின் மக்கள்,ஆலமரத்தோடு வைத்திருந்த உறவோ சாதாரணமில்லை....
ஆதிகாலம்  தொட்டே ஆலமரத்தடி திண்ணைகள் இருந்திருக்கின்றன.வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்லவும் கிராமக் கூட்டங்கள் நடக்குமிடமாகவும்,வியாபாரம் நடக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.வணக்கத்திற்குரிய மரமாகவும் இருந்திருக்கிறது. பல சங்கப் பாடல்களிலும் இடம்பெற்று வெட்டினால் பாவம்-தீங்கு உண்டாகும் என்ற அளவில் நம்பிக்கை இருந்திருக்கிறது.இன்றைக்குப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.மக்கள் வாழும் பகுதிகளிலும்,விவசாய நிலங்களிலும் அதிக அளவில் இருந்திருக்கின்றன்.அக்காலத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளையும், உணவுத்தேவைக்கான சிறிய விவசாய நிலப்பகுதிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால், அத்தனை நிலங்களுமே வனக்காடுகளாகத்தான் இருந்திருக்கிறது. அதில் ஆலமரங்கள் பெருத்த எண்ணிக்கையிலேயே இருந்திருக்கிறது....



ஒரு ஆலமரத்தில் சிறியதும் பெரியதுமான பலவகைப் பறவைகள்,பூச்சிகள்,பல்லிகள்,அணில்கள்,எறும்புகள் போன்ற பல்லுயிர்களும் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.பல பறவைகளுக்கு விருப்பமான உணவு ஆலம்பழம்...



அலெக்சாண்டர் தமது படைகளோடு இத்தியாவினுள் நுழைந்த போது வியந்து ஆச்சரியப்பட்டு பார்த்தது ஆலமரத்தைத்தான்.நான்காயிரம் முதல் ஏழாயிரம் படைவீரர்கள் ஆலமரத்தின் கீழே தங்கியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பரந்த மரங்கள் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இன்றைக்கும் நானூற்றி ஐம்பது வருட பழமையான அடையாறு ஆலமரம் பல கதைகளைச் சொல்லும் சாட்சியாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல்,
ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம்,
உலகப் புகழ்பெற்ற கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம்,
குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன.பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில் ஆலமரம் கூட ஆச்சரியமான அளவுதான். ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரே சமயத்தில் மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை இந்தமரங்களின் கீழ்உள்ள நிழலில் தங்கலாம்....



ஆலம் விழுதுகள் பல மருத்துவ குணம் கொண்டது அதன் துவர்ப்புச் சுவையே பல்,ஈறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்பவையாக இருக்கிறது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-இது காலகாலமாக தமிழ்பேசும் மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கும் வெகு சாதாரண பழமொழி.ஆலமரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ பயனுடையது என்பதை மறுப்பதற்கில்லை.அதிலும் குறிப்பாக ஆலம் விழுதின் தண்டில் பல் துலக்கினால்,பல் மற்றும் ஈறுகள் தொடர்பான அத்தனை பிரச்சனைகளும. எளிதில் தீரும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை என்பதைவிட,அதுதான் உண்மை என அடித்துச் சொல்லலாம்.நான் நீண்ட நாட்கள் ஆலம் விழுதிலும்,கருவேலங்குச்சியிலும் பல் துலக்கியவன்....



ஒரு மொழியில் ஒரு பெருளிற்கு பல பெயர்கள் இருத்தல் என்பது,அது அந்த மொழிபேசும் மக்களோடு நீண்ட நெடுங்கால பிணைப்பில் உள்ளது என்பதை எளிதில் அறியலாம் அந்த வகையில் இந்த மரத்திற்கு,
இயக்கு,
ரோதம்,
காமரம்,
சோளி,
தோல்மரம்,
பாமரம்,
பூதம்,
வடம்,
பானோக்கி....
இன்னும் எத்தனை பெயர்களோ?!!!...
இப்படி பல பெயர்களில் அழைத்தாலும் ஆலமரம் எனப் பெயர் வந்ததற்கு காரணம் மிக அகலமான பரப்பளவில் வளருவதால் இதற்கு "அகல்மரம்"-என்ற பெயரே நீண்ட காலம் இருந்தது.பின்னர் காலப்போக்கில் இப்பெயரே மருவி ஆலமரம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது....



ஆலமரங்கள் நீண்டகாலம் நிலைத்துநிற்க விழுதுகள் முக்கிய காரணம்.கிளைகளிலிருந்து கீழே இறங்கும் விழுதுகள் விலங்குகளினாலோ அல்லது மனிதர்களாலோ இடையூறு இல்லாமல் இருந்தால் மண்ணில் ஊன்றி உறுதியாகி கிளைகளைத் தாங்கி,தாய்மரத்தின் சுமையைக்குறைப்பதோடு மரம் பரந்து விரிவடையவும் உதவுகிறது.நான் பார்த்த மரங்களில் குறிப்பாக கர்நாடகாவில் சில ஆலமரங்கள் விழுதுகள் இல்லாமலேயே இருந்தன (அதற்கான காரணத்தை அனுபவசாலிகள் யாராவது விவரித்தால் உதவியாக இருக்கும்)அதே சமயத்தில் நம்மூரைவிட மிகப் பருத்த மரங்களையும் பார்க்க முடிந்தது.ஆலமரகுடும்பத்தின் வேறு இனங்களாகவும் இருக்கலாம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் அங்கும் அந்த அழகான மரங்கள் சிதைந்து நின்ற காட்சிகள் மனதை இன்னும் வருத்திக்கொண்டே இருக்கிறது....



கரூர் பக்கத்தில் உள்ள நெரூரில் கோட்டைமேடு என்ற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் அதில் எக்கச்சக்க பாலித்தீன் பைகளும் சில வைக்கோளில் செய்த குடுவைகளையும் கட்டப்பட்டிருந்தன்.அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அதனுள் மாடுகள் கன்றை ஈன்றபின் வெளித்தள்ளும் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து ஆலமரம் போன்ற பால்மரங்களில் கட்டிவிடுவார்களாம்.அப்படிக் கட்டினால் அதிகளவில் பால்சுரக்கும் என்கிற நம்பிக்கையாம்.நம்பிக்கை இருக்கட்டும் அதற்காக பாலிதீன் பைகளிலா கட்டுவதா ? அது காய்ந்துவிடாமல் நாற்றமெடுத்து,ஈக்கள் மொய்த்து சுகாதாரகேடும்,சூழல் கேடுமல்லவா நடக்கிறது. வைக்கோலை பயன்படுத்தினால் பிரச்சனை வராதே.....



ஆலமர அனுபவங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு தகவல்கள் இருக்கிறது. இங்கு இப்போதைக்கு இது போதும்.அதிக வெப்பம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆலமரம் போன்ற அதிக நிழல்தந்துஅதிக ஆக்ஸிஜன் தரும் மரங்களே இன்றைக்கு தேவை என்பதை உணர்ந்து பாதுகாப்போம்.பயன்பெறுவோம்...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
விரிவான தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1363912550391443&id=100003181323647

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...