Sunday, 25 June 2017

கானக மைனா

கானக மைனா...



இந்தப்படத்தை வைத்து மானைப்பற்றி எழுதுவதா ?..
இல்லை மைனாவைப் பற்றி எழுதுவதா ?....
மானை அதுவும் இந்த மிளா என்கிற கடமான்கள் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது,
( https://m.facebook.com/story.php?story_fbid=1223120461137320&id=100003181323647 )....

இப்ப இந்த மைனாவைப் பற்றி பார்ப்போம்.,
சரி மைனாக்கள் என்றாலே எங்கும் நிறைந்திருக்கின்ற,இப்போது கிட்டத்தட்ட காக்கைகளுக்கு சமமாய் எண்ணிக்கையிலும்,செயலிலும் இருக்கும், நாகணவாய்ப்புள் என்கிற சாதாரண மைனாதான் நினைவுக்கு வரும். அதற்கு எங்கள் பகுதியியில் என்ன பெயர் தெரியுமா ?....
அழுகவண்ணான் குருவி(அளுகனாங்குருவி)....
ஏன் இதற்கு இந்தப் பெயர் என இதுவரை தெரியவில்லை.வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கு இவை ஆஸ்த்திரேலியா கொண்டு செல்லப்பட்டு,ஒரு வழியாய் வெட்டுக்கிளிகள் அங்கே  ஒழிந்தது.ஆனால் இவற்றை கட்டுப்படுத்தவே முடியாமல் அரசாங்கமே திணறியதெல்லாம் ஊரறிந்த கதை...



மைனாக்களில்(starling) பல வகைகள் இருந்தாலும் நான் பார்த்தவை கிட்டத்தட்ட ஆறு வகைகள்...
அதில்,
மைனா(common mynah).,
கருந்தலை மைனா(Brahmini starling).,
காட்டு மைனா( jungle myna).,
மலை மைனா(hill mynah),
ரோசாமைனா-சூறைக்குருவி (Rosy starling).,
சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)...

இந்தப் படத்திலுள்ளது காட்டு மைனா.மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு.அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.இதன் அடர்ந்த நிறமும் அலகும்,அலகிற்கு மேலுள்ள மீசையும்  இன்னும் கூடுதல் அழகுதான்...

ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்தே வாழும் என்பதற்கு இந்தப் படத்திலுள்ள மைனா நல்ல உதாரணம்.நாங்கள் பார்க்கும்போது அந்த பெண்கடமானின் கண்களிலும் மூக்கிலும் உள்ள கழிவுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தது.அதற்கு வாகாக அந்த மானும் தலையை அசைக்காமல் லயித்து நின்று கொண்டிருந்தது. நாமக்கு காது குடைவதுபோல் அதற்கும் சுகமாகக்கூட இருந்திருக்கலாம்.அது அசையாமல் அனுபவித்ததை அப்படித்தான் பார்க்க முடிந்தது.ஒரு உயிரினத்திற்கு அந்தக் கழிவுகூட உணவாகவும்,இன்னொன்றிற்கு சுகமும் சத்தமும் நடந்துகொண்டிருப்பதுதான் இயற்கையின் சிறப்பு...

மானின் மீது சவாரி செய்து கொண்டே பறக்கும் பூச்சிகளை பிடித்துண்ணுவது,மைனாவிற்கு கூடுதல் பயன்.காட்டுமாடுகள் மீதும் இப்படித்தான் சவாரி செய்யும்.புழு பூச்சிகள் மட்டுமல்ல பழங்களையும்,பூக்களில் உள்ள மதுரத்தையும் மிக விருப்பமாக உண்ணும்....

வனக்காடுகளில் மட்டுமே இதைப் பார்த்திருக்கிறேன்.நீலகிரி மலையிலுள்ள கிராமங்களில் எல்லாமே இங்குள்ள சாதாரண மைனாக்களைப்போல்,வீடுகளுக்கு முன்புள்ள கழிவுகளில் உணவைத் தேடுவதையும்,சோற்றுப் பருக்கைகளை தின்பதையும் பார்த்திருக்கிறேன்.ஆனால் வனச்சூழலில்,அழகாக பல குரல்களில் கூட்டமாக பழமரங்களில் கூச்சலிடுவதை மிக மிக இரசித்து அனுபவிக்கலாம்.ஒவ்வொரு வகை மைனாவிற்கும் ஒவ்வொரு விதமான குரல்கள்.அனைத்தும் இனிமைதான்.அதில் இது தனி ரகம்.வனவிலங்கு சட்டம் கடுமையாவதற்கு முன்பெல்லாம் மனிதர்கள் இதைப்படுத்திய பாடு இருக்கிறதே!...
குஞ்சுகளாய் இருக்கும்போது கூண்டில் அடைத்து கிளிகளைப்போல் பேசக்கற்றுக் கொடுத்தால்,இது அசத்தும்.நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் உள்ள மைனா அங்கு வருபவர்களைஎல்லாம், வாங்க...
வாங்க...
உட்காருங்க என்று சொல்லுமாம்!(கத்துமாம்).இதை எனது நண்பன் பாபு சொல்லும்போது மிக ஆச்சரியப்பட்டேன்.ஒரு குஞ்சு அங்கே ஐநூறு ரூபாய்களுக்கு அப்போது விற்றதெல்லாம் தனிக்கதை...

உங்களுக்கும் இந்த மைனாக்களுடன் பேசிய அனுபவமிருந்தால் பகிருங்கள்.

என்றும் சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52

1 comment:

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...