Tuesday, 28 March 2017

சருகுமான்

அறிந்து கொள்வோம்...

Mouse deer-சருகுமான்.



சருகுமான் என்பது மானே இல்லை அதாவது மான் இன வகைப்பாட்டில் வராத சிறிய குளம்பிவிலங்கு இது...

சருகு என்பதன் பொருள் இரட்டைக்குளம்பி என்பதே அதிலும் இவை மான்போன்றே தோற்றமளிப்பதால் இதை சருகுமான் என்றும் கூறுகிறார்கள். இலை தழைகளுடன் ஒன்றி காய்ந்த சருகுகளுக்கு இடையில் இதன் வாழ்க்கை உள்ளதால்,அதாவது சருகுகள் போன்றே தோற்றம் இருப்பதால் இதன் பெயர் சருகுமான் எனவிளக்கமளிக்கின்றனர் சிலர் அது பொருந்தினாலும் அது காரணமல்ல...



இதன் ஆங்கிலப் பெயரான Mouse deer என்பதனை அப்படியே மொழிப்பெயர்த்து எலிமான் என சொல்வோரும் உண்டு...

சங்க இலக்கியத்தில் வரும் பொய்மான்,மாயமான் இதுவே என்கின்றனர் அதாவது இதன் வேகமும் சட்டென மறைந்துகொள்ளும் திறனும் அப்படி.பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இரைதேடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் பகலில் இதை நான் பார்த்ததே இல்லை...

திண்டுக்கல்-சிறுமலை மற்றும் கொள்ளிமலைக்காடுகள் உட்பட தமிழக காடுமுழுவதுமே காணப்படுகிறது...




சிலபகுதி ஆதிகுடி மக்கள் இதனை கூரன்பன்றி எனவும் அழைக்கிறார்கள் இதுவே சரியான தமிழ்ப் பெயராக இருக்கும்.தமிழை மூலமாகக் கொண்ட தெலுங்கு மொழியில் இதன்பெயர் "ஜரினிபன்டி" அதாவது பன்றியும் மானும்.மலையாளத்தில் இதன்பெயர் "கூரன்"...

இவை மிகச்சிறிய உருவம் அமைப்பு கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும்.இவற்றில் ஆணிற்கு பன்றிகள் போன்ற கோரைப்பற்கள் உண்டு இவை தந்தம் போல  இணையாக நீண்டு இருக்கும்...

இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன....



வேகமாக அழிந்துவரும் இவற்றை மனிதர்கள்தான் காக்க வேண்டும் ஏனெனில் இவற்றை வரம்புமீறி அழிப்பதும் மனிதர்களே.ஆமாம் கடுமையான வனவிலங்குகள் சட்டம் இருப்பினும் இன்றளவும்கூட பரவலாக வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை...



இந்த சருகுமானில் சிற்சில வேறுபாடுகளுடன் பத்திற்குமேற்பட்ட உள்ளினங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஆக இதற்கு,
சருகுமான்,
கூரன்பன்றி,
பொய்மான்,
மாயமான்,
எலிமான்...
என எத்தனை பெயர்கள்!!!...

(பட உதவி:இணையம்)

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...