Friday, 21 April 2017

பூமிதினம்(Earth day)2017

ஏப்ரல் 22
பூமிதினம்(Earth day)2017



எதற்காக இந்த தினமெல்லாம் ?...
இது கொண்டாட்ட தினமா ?
இல்லை....
"எச்சரிக்கை"தினம்...
இயல்பான பூமியாக இருந்தால் இதுமாதிரி எந்த தினத்தையும் அனுசரிக்கத்தேவையில்லை.,
இந்தபூமிப்பந்தின் இயல்புநிலையை மாற்றி எச்சரிக்கை கோட்டையும்(deadline)தாண்டவைத்துவிட்டோம் என்பதனை எச்சரிக்கவே இதுமாதிரி தினங்களை யாரோ  ஒருசிலர் ஒன்றுகூடி பயத்தால் உருவாக்கப்பட்டவைகள்தான் இதுமாதிரி தினங்கள். இதில் என்ன கொடுமை என்றால் இந்த பூமியில் வாழுகிற மனிதர்களில் அதிகமானவர்களுக்கு இன்னும் இந்தமாதிரி எச்சரிக்கைகள் போய்ச் சேரவேயில்லை என்பதுதான்...

அப்படி என்னதான் இந்த பூமிக்கு நடந்துவிட்டது அதற்கு நான் என்னசெய்வது இதுதானே பலரின்கேள்வி!!!...

சுத்தமான காத்து காணாமல்போய் காத்தெல்லாம்
மாசு...
மாசு...
மாசு...

பூமியிலுள்ள நீரெல்லாம் குடிக்கவே லாயக்கில்லாத நீராக மாறியதோட எங்க ஊருப்பக்கம் ரெண்டாயிரம் அடிக்கு கீழேதான் ஈரமண்ணையே பார்க்கமுடியுது...
உண்கிற உணவும்,நீரும்,
நஞ்சு...
நஞ்சு...
நஞ்சு...

எங்கும் பூத்துக்குலுங்கிய பசும்போர்வை போர்த்தியிருந்த பூமியெங்கும் ஒரே
குப்பை...
குப்பை...
குப்பை...
-இன்றைக்கு இந்தக் குப்பைகளுக்கு பல பெயர்கள் குப்பகளில் பலவகைகள் எங்களுக்குத் தெரிந்த குப்பையெல்லாம் ஆடு மாடுகளின் கழிவுகள்தான்...,
ஆனால் இன்றக்கோ ஒழிக்கவே முடியாத எலக்ட்ரானிக் குப்பைகள்,
பிளாஸ்டிக் குப்பைகள்,
ரசாயனக்குப்பைகள்,
மருத்துவக் குப்பைகள்...
அனல்மின் குப்பைகள்...
அணுக்கழிவுகள்...
-இதுவெல்லாம் என்ன ? இதுவெல்லாம் யாரால் ?
இதுவெல்லாம் எதனால் ?...

இந்தபூமி மிகச்சிலரின் சொகுசுக்காகவும் திருப்திக்காகவும் தினம்தோறும் ஒவ்வொருநொடியும் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது இதை சிதைப்பவர்களில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத அறியாத மனிதர்கள்தான் அதிகம்...

ஒவ்வொரு நிமிடமும் இந்த பூமிமுழுவதும் ஐம்பத்தாறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறதாம்.இதில் எங்க ஊர்ல தனியார் நிலங்களில் உள்ளூர் மரவெட்டியால் வெட்டுகிற மரமும்..,
வளர்ச்சீங்கற பேர்ல ரோடுபோட்றேன் ஊரை விரிவாக்குறேன்,தொழிற்சாலை கட்றேன்ட்டு வெட்டுற மரமெல்லாம் கணக்குல வருமான்னு தெரியல...

பூமியச் சுற்றியுள்ள தாவரக் கவசத்தையும்,ஓசோனையும் ஓட்டையப்போட்டதால பூமி நாளுக்கு நாள்
வெப்பம்....
வெப்பம்...
வெப்பம்...
-இப்படியே போனா  அடுத்துவரும் நாட்களில் நாம் எங்குபோய் நிற்போம்?...
அனேகமா இந்த பூமியே தந்தூரி அடுப்புமாதிரி ஆகிவிடும் இப்பவே அந்தமாதிரிதான் இருக்கிறது...
அதோடு.,
குடிக்கநீரும்,
மூச்சுவிட காற்றும்
உண்ண நல்ல உணவும் இல்லாமலேயே போய்விடும்.அதோடு இனி,
பருவத்தில் மழை இருக்காது
அல்லது மிகுதியான பெருமழைபெய்யும்...
தொடர்ந்த நீண்ட வறட்சிநிலை உருவாகலாம்....
விளைநிலங்கள் பாலைநிலமாகலாம்...
இனி என்ன செய்யப் போகிறோம்?

மனிதன்உழைப்பில்லாமல் என்றைக்கு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தானோ அன்று துவங்கியது இந்த சூழல்சிதைவு.ஆக இதன் வரலாற்றை ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை...

மனிதர்களைத் தவிர எந்த உயிரினமும் இயற்கையை சிதைத்துவாழவில்லை...
மனிதர்கள்கூட உணவிற்காக சிதைக்கவில்லை,
சொகுசான,
வசதியான வாழ்க்கைக்கும்,
மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் எனக்காட்டிக்கொள்ள இயற்கையை சிதைத்து பொருளைக்குவித்து,மிகத் தாழ்ந்தவனாகிவிட்டான்....

சூரியனைச்சுற்றிவருகிற கோள்களிலேயே உயிர்வாழக்கூடிய சூழல் உடைய சிறப்பான கோள்தான் இந்த பூமி.., இனி இந்த உயிர்ச்சூழல் உடைய பூமியில் இதற்குமேலும் நாமும் நமது சந்ததியினரும் வாழவேண்டும் என்கிற சுயநலத்தினை மனதில் கொண்டாவது முறையாக வாழப்பழகுவோம்...

*மரங்களை வெட்டுவதை நிறுத்தி வணிக நோக்கில்லாத மரங்களை இந்த பூமியெங்கும் நடுவோம்...
*பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சள்பையை கையிலெடுப்போம்...
*முடிந்தவரை சைக்கிளை ஓட்டுவோம் முடியாவிட்டால் பொதுப் போக்குவரத்தையாவது பயன்படுத்துவோம்...
*உயிர்வாழத் தேவையானதை மட்டும் வாங்குவோம் தேவையற்றதை வாங்கும் நுகர்வு மனப்பான்மையை புதைப்போம்...
*வணிகநோக்கில் இயற்கையை அழித்து  காசாக்குவதை தடுப்போம்...

-தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமை வாழ்க்கை வாழ்ந்தாலே வருங்கால சந்ததியினரும் மூச்சுவிட வாய்ப்பாய் அமையும் இல்லையென்றால் இந்தபூமி தம்மை எப்படியாவது சமன்படுத்திக்கொள்ளும். உருவத்தில் மிகப்பெரிய டைனோசர்களையே காணாமல்போகச் செய்த இந்த பூமிக்கு மனிதர்களை சரிசெய்ய வெகுநேரம் ஆகாது...

இந்த புவிநாளில் அதை உணர்ந்து வாழ்வோம்.இனிவரும் எல்லா நாட்களையும் புவிநாளாகவே அனுசரித்து வாழ்வோம்...
சூழலியல் அக்கறையுடன்:
Ramamurthi Ram
முகநூல் பக்கத்திற்கு:
https://www.facebook.com/ramamurthi.ram.52



No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...